புயலுக்கு வாய்ப்பு.. 22 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!
By Arul Valan Arasu | Galatta | 03:20 PM
தமிழ்நாட்டில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் 22 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அத்துடன், அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக, மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை, காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அரபிக் கடல் பகுதியில் திருவனந்தபுரம் அருகே மையம் கொண்டுள்ள தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த தாழ்வு மண்டலமானது, லட்சத்தீவை நோக்கி நகரும் என்றும், அப்போதுதான் புயலுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
புயல் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்றும் சுட்டக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, கேரளா கடல் பகுதி, மாலத்தீவு, லட்சத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே, தொடர் கனமழை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.