1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
By Arul Valan Arasu | Galatta | 11:58 AM
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் மற்றும் அரசி உள்ளிட்ட பொங்கல் வைப்பதற்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
அதுபோலவே, இந்தாண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு அறிவித்து, தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது. இதற்காக, தமிழக அரசு 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது.
இதனையடுத்து, பொங்கல் திருநாள் வரும் தை மாதம் வர உள்ளதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயுடன், பச்சரிசி, சக்கரை, கரும்பு, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்கி வைத்தார். அப்போது, ஒரு சில ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, 1000 ரூபாய் பணமும், சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பினையும் வழங்கினார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2 கோடியே 5 லட்சம் சேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
இதனிடையே. சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி ரேஷன் அட்டைதாரர்களாக மாறி வருகின்றனர். இந்நிலையில், இதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.