“மக்களுடன் நெருக்கமாக இருந்தால் குற்றங்கள் குறையும்” போலீசாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..
“மக்களுடன் நெருக்கமாக இருந்தால் குற்றங்கள் குறையும்” என்று, அதிகாரிகளுக்கும் போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் “குடியரசு தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா” சற்று முன்னதாக நடைபெற்றது.
இந்த விழாவில், காவல் துறை, ஊழல் தடுப்பு, கண்காணிப்பு, தீயணைப்பு, மீட்புப் பணி என்று சிறப்பாக செயல்பட்ட திறமையான காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
அதன்படி, தமிழக காவல் துறையில் 319 திறமையான போலீசாருககு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கி சிறப்பு சேர்த்தார்.
இதனையடுத்து, இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பதக்கங்கள் பெற்ற அனைத்து காவல் வீரர்களையும் பாராட்டுகிறேன்” என்று, தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல்வேறு பதக்கங்களையும் போலீசார் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றும், காவல் துறையில் உள்ளவர்கள் பொது மக்களின் நெருக்கமாக இருந்தால் தான், இங்கு குற்றங்கள் குறையும்” என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையும், ஆலோசனையும் வழங்கினார்.
அத்துடன், “தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், மற்றோரு கை காவல் துறை” என்றும், முதல்வர் பெருமையோடு குறிப்பிட்டார்.
“காவல் துறை நம் நண்பன் என்று சொல்லும் வகையில், காவலர்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்றும், காவல் துறை என்பது குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கித் தருவதாக இருக்க வேண்டும்” என்றும், அவர் பேசினார்.
“காவல் துறையை தலை நிமிர வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு காவலருக்கும் இருக்க வேண்டும்” என்றும், முதல்வர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
“பொது மக்கள் அச்சம் தரும் சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், போதைப் பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்” என்றும், முதல்வர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, “கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதால் தான், புதிய தொழில் நிறுவனங்கள் வருகின்றன என்றும், அமைதியான சூழ்நிலையில் தான் தொழில் வளர்ச்சி ஏற்படும்” என்றும், முதல்வர் சுட்டிக்காட்டினார்.
“எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறோம்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு பேசினார்.