“வீடு இல்லாத ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்களுக்கு அரசே வீடு கட்டி தரும்” பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி உறுதி..
By Aruvi | Galatta | Feb 14, 2021, 11:30 am
“வீடு இல்லாத ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்களுக்கு அரசே வீடு கட்டி தரும்” என்று, பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்து உள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தீவிரமான அரசியல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் படி, தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப் பயணம் செய்து வரும் அவர், தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நாள் தோறும் அறிவித்து வருகிறார்.
அந்த வகையில், “விவசாயக் கடன் தள்ளுபடி, 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்” என்று, ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனால், தமிழக மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது, பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். அதன் படி, “கிராமம் முதல் நகரம் வரை வாழும் வீடு இல்லாத
ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியினர் மக்களுக்கு வீட்டு மனையை அரசே வாங்கி அவர்களுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும்” என்று, மகிழ்ச்சியான அறிவிப்பினை உறுதிப்படத் தெரிவித்தார். இதனால், அங்கு கூடியிருந்த ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியினர் மக்கள், இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக, கை தட்டி முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.
முதல்வரின் அந்த வீட்டு மனை மற்றும் வீடு கட்டித் தரும் அறிவிப்பால் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியினர் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அதே போல், “100 கோடியே 87 லட்சம் 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 681 காவலர் குடியிருப்புகள், ஒரு காவல் நிலையம், 2 இதர காவல் துறை கட்டடங்கள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள் ஆகியவற்றை” முதலமைச்சர் பழனிசாமி இன்று நேற்று திறந்து வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, பொது மக்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் 1100 தொலைப்பேசி சேவை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொது மக்கள் தங்கள் குறைகளை அரசுக்குத் தெரிவித்து விரைந்து தீர்வு காணும் வகையில், தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்ட, உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வு மேலாண்மை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்” என்று, குறிப்பிடப்பட்டு உள்ளது.
“முதலமைச்சர் பழனிசாமி கடந்த 15.9.2020 அன்று சட்டப் பேரவை விதி எண்110 ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தற்போது வெவ்வேறு அரசுத்துறைகள் தங்களுக்கென, தனித்தனியே துறைவாரியான மக்கள் குறை தீர்ப்பு மையங்கள் மற்றும் இணைய தளங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகின்றன என்றும், மாவட்ட அளவில் திங்கட்கிழமை தோறும் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள், அம்மா திட்டக் குறை தீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள் போன்றவையும், மாநில அரசு அளவில் முதல்வரின் தனிப்பிரிவு, அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டுத் தீர்வுகள் காணப்படுகின்றன” என்றும், கூறப்பட்டு உள்ளது.
“இதனால் ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை அளிக்கும் சூழல் ஏற்படுகிறது என்றும், ஒரே கோரிக்கை மனு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும்
வழங்கப்படுவதையும் காண முடிகிறது என்றும், இதனால் தமிழ்நாடு அரசுத்துறைகளின் கீழ் செயல்படும் எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, “பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து அவற்றிற்குத் தீர்வு காண ஒரு குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து 1100 தொலைப்பேசி சேவை அறிமுகப்படுத்தப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்து இருந்தார் என்றும், அதன் படியே 1100 தொலைப்பேசி சேவை திட்டமானது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், “இந்த சேவை மையத்தில் புகார் தெரிவித்தால், உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைக்குப் பதிவு செய்து அனுப்பப்பட்டுக் குறை தீர்க்கப்படும்” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
மேலும், “புகார் தெரிவித்தவருக்குக் குறுஞ்செய்தி வாயிலாக மனுதார்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்றும், பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர், அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறை அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களால் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்றும், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.