கட்சி பாகுபடுயின்றி நடந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! ஓபிஎஸ் - இபிஎஸ் எம்.எல்.ஏவாக பதவி ஏற்றனர்!
By Aruvi | Galatta | May 11, 2021, 11:56 am
எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது, கட்சி பாகுபடுயின்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து கொண்டது எதிர்க்கட்சியினரை வெகுவாக ஈர்த்துள்ளது.
தமிழக சட்டப் பேரவையின் 16 வது கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் முதல் நாளில் புதிதாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குத் தமிழக சட்டப்பேரவை தற்காலிக சாபநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதன் படி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி பிரமாணம் செய்து கொண்டார். மு.க.ஸ்டாலின் பதவி பிரமாணம் செய்து கொண்ட போது, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” எனக் கூறி மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். மு.க ஸ்டாலினைத் தொடர்ந்து, அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகனும் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவி பிரமாணம் செய்து கொண்டார்கள்.
33 அமைச்சர்களில் 2 அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சட்டப்பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கட்சிகளின் சட்டப்பேரவை குழு தலைவர்கள், அவர்களைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், அகர வரிசைப்படி பதவியேற்றுக் கொண்டார்கள்.
அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே மணி உள்ளிட்டோர் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்க அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 66 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 18 பேரும், பாமகவைச் சேர்ந்த 5 பேர், விசிக 4 பேர், பாஜக 4 பேர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலா 2 உறுப்பினர்களும் இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாகச் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள், உடல் நலம் சீரானதும் பதவியேற்றுக்கொள்வார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
அதன் பின்பு, “எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது, கட்சி பாகுபாடின்றி நடந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு” அவர்கள் நன்றி தெரிவித்தனர். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எழுந்து நின்று அவரும் நன்றி தெரிவித்தார்.
மேலும், இன்று சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கிய நிலையில், “16 வது சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வு” செய்யப்பட்டு உள்ளார்.
அதே போல், “துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வு” செய்யப்பட்டு உள்ளார்.
இதனிடையே, இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் “எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.