இனி இந்தியாவா, `இந்தி'யா வா? - கனிமொழிக்காக குரல் கொடுக்கும் ஸ்டாலின்
By Madhalai Aron | Galatta | Aug 10, 2020, 06:34 pm
டெல்லிக்கு வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை, "நீங்கள் இந்தியரா?" என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு, நேற்றைய தினம் சர்ச்சையாகியிருக்கிறது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், விமான நிலைய அனுபவத்தைப் பகிர்ந்திருந்த கனிமொழி, "இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டபோது, அவர், "நீங்கள் இந்தியனா?" என்று என்னிடம் கேட்டுள்ளார். இந்தி மொழி அறிவதை வைத்தே, இந்தியனாக இருப்பதற்கு சமம் என்பது எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
#HINDIIMPOSITION என்ற இந்தி திணிப்பு தொடர்பான டிவிட்டர் ஹேஷ்டேக்கையும் கனிமொழி பயன்படுத்தியிருந்தார்.
இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த கருத்துக்கள் நேற்று தொடங்கி வரிசையாக பதிவாகி வந்தன. இந்நிலையில் இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழிக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவு செய்திருந்தார். அதில், ``இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார்.
இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்" என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்.
இதே விவகாரத்தை பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேறு மாதிரியாக கூறி வருகின்றனர். உதாரணத்துக்கு, எஸ்வி சேகர் இதை பற்றி சொல்லும்போது, ``மும்மொழி கல்விக்கு எதிராக பேசி வரும் திமுகவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தேவையில்லாமல் இதுபோல கருத்துக்களை கனிமொழி மூலம் திமுக தலைமை முன்னெடுத்துள்ளது.. இதற்காகத்தான் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்துகிறோம்.
புதிய தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டிருந்த நாளிலிருந்தே, தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் குரல்கள் அதிகமாகியுள்ளன.
திமுக மட்டுமன்றி, அதிமுக-வினரும், தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி இருந்தனர். இதுபற்றி முதல்வர் அந்த நேரத்தில் கூறும்போது, ``மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் அதிமுக அரசு எப்போதும் அனுமதிக்காது.எப்போதும் போல மாற்றம் இன்றி இருமொழி கல்விக் கொள்கை மட்டுமே தமிழகத்தில் இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
கல்விக்கொள்கை என்ற பெயரால் தமிழகத்திற்குள் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டி இருந்தார்.
மேலும் ஸ்டாலின் தனது டிவிட்டில், ``மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்" என்றும் குற்ப்பிட்டிருந்தார்.
இப்படி திராவடக் கட்சிகள் இணைந்து மும்மொழி கொள்கையை விமர்சித்து, எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதற்கிடையில் கனிமொழி இந்தி திணிப்பு என்ற கருத்தை முன்வைத்ததால், அதை பாஜகவினர் மற்றும் வலதுசாரிகள், தங்களுக்கு சாதகமான - குறிப்பாக மும்மொழி கொள்கைக்கு சாதகமான வாதமாக இதை எடுத்துக் கொண்டு, பிரச்சாரங்கள் மேற்கோண்டு வருகிறார்கள்.