இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான நடராஜனுக்கு, முதல்வர் - எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து!
By Nivetha | Galatta | Nov 10, 2020, 06:48 pm
நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி தலா மூன்று போட்டிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது.
இந்த நிலையில், சுமார் இரண்டு மாதங்கள் நீடிக்கும் இந்த சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில், தமிழகத்தை சேர்ந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி மற்றும் தங்கராசு நடராஜன் ஆகிய நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் அஸ்வின் டெஸ்ட் அணியிலும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் டி20 அணியிலும் இடம்பெற்றுள்ள நிலையில் நடராஜன் கூடுதல் பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த நான்கு வீரர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பலரும் சமூக ஊடகங்களில் மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, எளிய பின்னணியிலிருந்து, பல்வேறு தடைகளை கடந்து வந்து, தற்போது தனது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சினால் ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜன் தேர்வுசெய்யப்பட்டுள்ளது குறித்த பேச்சு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், எவ்வித தொடரிலும் ஆடும் அணியில் நேரடியாக இடம்பிடிக்காமல் கூடுதல் பந்துவீச்சாளராகவே நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் உண்மையிலேயே களமிறங்கி விளையாடுவதற்கான வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேலம் சின்னம்பட்டியை சேர்ந்தவர் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடராஜன். டி-வில்லியர்ஸ், தோனி உள்ளிட்ட கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை திணற வைத்தார். நடராஜன் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த நடராஜன், இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்
காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல, இந்திய அணிக்கு விளையாடத் தேர்வாகியுள்ள தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக் செவ்வாயன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
`இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடத் தேர்வு பெற்றுள்ள தமிழக இளைஞர் சேலம் திரு. நடராஜனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
திரு. நடராஜனைத் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவர் மேலும் பல உயர்வுகளைப் பெறவும், வெற்றிகளைக் குவிக்கவும், அவர் மூலமாக இந்திய அணிக்குப் பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன்.
நடராஜனின் அனைத்துக் கனவுகளும் நிறைவேற வாழ்த்துகிறேன்!'
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.