சரியாகப் படிக்காத காரணத்தால் பெற்றோர் கண்டித்த நிலையில், அந்த 10 ஆம் வகுப்பு மாணவி “என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக” நாடகமாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் எல்லாப்புரா தாலுகா நந்தோள்ளி கிராமத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அத்துடன், சம்மந்தப்பட்ட இந்த மாணவி சரிவர வீட்டுப் பாடம் செய்யாமல் பள்ளிக்குச் சென்று வந்து உள்ளார். இதனால், வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் புகார் சொல்ல, தலைமை ஆசிரியர் அந்த மாணவியை அழைத்துக் கண்டித்து உள்ளார். ஆனாலும், அந்த மாணவி வழக்கம் போல் எந்த வீட்டுப் பாடமும் செய்யாமல் அன்றாடம் பள்ளிக்கு வந்து சென்று உள்ளார்.
இதனால், கடும் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், மாணவியின் பெற்றோரைப் பள்ளிக்கு வரச்சொல்லி, மாணவி பற்றி புகார் கூறி இருக்கிறார்.
அத்துடன், “10 ஆம் வகுப்பு படித்து வரும் உங்கள் மகள் சரிவரப் படிப்பதில்லை என்றும், வீட்டுப் பாடங்களைச் சரிவரச் செய்வதில்லை என்றும், இப்படியே இருந்தால் அவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற மாட்டார் என்றும், அதனால் இனி அவரை பற்றி நீங்கள் என்னிடம் கேட்காதீர்கள். முடிந்தால் அவருக்கு அறிவுரை கூறுங்கள்” என்றும், புகாராகக் கூறி இருக்கிறார்.
இதனையடுத்து, வீட்டுக்கு வந்த மாணவியை, பெற்றோர் கடுமையாகக் கண்டித்து உள்ளனர். “பாடத்தில் அதிக கவனம் செலுத்தும் படி, தொடர்ந்து அறிவுரை கூறி இருக்கிறார்கள்.
பெற்றோரின் அறிவுரையால் கடும் ஆத்திரமடைந்த மாணவி, பெற்றோரைப் பழிவாங்க திட்டம்போட்டு உள்ளார்.
அதன் படி, அவர் தனது வீட்டு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று சிறிது நேரம் தங்கியிருந்து உள்ளார். அப்போது, வீட்டில் மகளைக் காணவில்லை என்று, அந்த மாணவியின் பெற்றோர், அவரை அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர்.
அந்த நேரம் பார்த்து அழுதபடி அந்த மாணவி வீட்டுக்கு வந்து உள்ளார். இதனால், பதறிப்போன மாணவியின் பெற்றோர், “எங்கே போனாய்? என்ன நடந்தது? ன் அழுகிறாய்?” என்று, விசாரித்து உள்ளனர்.
அப்போது அந்த மாணவி, “என்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர்” என்று கூறி அழுது உள்ளார்.
இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அங்கேயே அவர்களும் கதறி அழுது உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அங்குள்ள எல்லாப்புரா காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த வழக்கு தொடர்பாகத் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
அதே நேரத்தில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த மாணவியை, போலீசார் அங்குள்ள எல்லாப்புரா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்தனர். அப்போது, அந்த மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், “இந்த மாணவியை பாரும் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும், இவர் பொய் சொல்கிறார்” என்றும், கூறி உள்ளனர்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், மாணவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். இந்த விசாரணையில், “சரியாகப் படிக்காமலும், வீட்டுப் பாடம் செய்யாமலும் மாணவி இருந்து வந்ததும், இதனால் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் கண்டித்ததால் இந்த பாலியல் பலாத்காரம் நாடகத்தை அந்த மாணவி நடத்தியதும்” விசாரணையில் தெரிய வந்தது.
இதனால், சற்று நிம்மதி பெரு மூச்சு விட்ட போலீசார், அந்த மாணவிக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அந்த மாணவியின் பெற்றோருக்கும் போலீசார் அறிவுரை கூறினார்கள். இதனால், அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.