தொழில் நிறுவனங்களைத் தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு
By Aruvi | Galatta | Apr 30, 2020, 01:39 pm
கொரோனா தாக்கத்தால், சில நாடுகளிலிருந்து வெளியேறும் நிறுவனங்களைத் தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக் குழு அமைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால், உலகமே என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. இதனால், உலக அளவில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் அனைத்து நாடுகளும் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை, தமிழகத்தில் தொடங்கும் வகையில், சிறப்புக் குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, கொரோனா தாக்கம் காரணமாக, வெளிநாடுகளில் தொழில் செய்து வரும் பல்வேறு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற முடிவ செய்துள்ளன.
அதன்படி அமெரிக்கா, ஜப்பான், தைவான், சிங்கப்பூர் தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து பல நிறுவனங்கள் வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அந்த நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவிற்கு இடமாற்றம் செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களை, தமிழகத்திற்கு அழைத்து வர தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை, தமிழக அரசு அமைத்துள்ளது.
மேலும், வெளிநாடுகளிலிருந்து இடம்பெயரும் நிறுவனங்களை இந்தக் குழு கண்டறிந்து, விரைவான அனுமதி, சிறப்பு சலுகைகள் வழங்குவது குறித்து முடிவு செய்யும் என்றும், குறிப்பாக அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்தக் குழு முதலமைச்சருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்திற்குப் பிறகு, தமிழகம் எப்போதும் போல் துடிப்புடன் செயல்படும் வகையில், முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புக் குழுவை அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.