நாட்டில் வெறுப்புணர்வை பாஜக பரப்புகிறது! - சோனியாகாந்தி
By Aruvi | Galatta | 06:35 PM
நாட்டில் வெறுப்புணர்வை பாஜக பரப்பி வருவதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கொஞ்சம் ஓய்ந்துள்ளது.
இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பெரும்பாலான எதிர்க்கட்சியினர் கலந்துகொண்ட நிலையில், திமுக பங்கேற்கவில்லை.
அதேபோல், இந்த கூட்டத்தை திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே புறக்கணித்திருந்தன.
இதனைத் தாண்டி நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சோனியாகாந்தி, “CAA, NRC-ல் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மக்களைத் தவறாக வழி நடத்தியுள்ளனர் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு செயலற்றதாக இருக்கிறது என்றும், பிரச்சினைகளை ஏற்படுத்தி பொருளாதார மந்த நிலையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி செய்வதாகவும் அவர் கவலைத் தெரிவித்தார்.
அதேபோல், நாட்டில் வெறுப்புணர்வைப் பரப்புவதாகவும், ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு உள்ளதாகவும் கூறி, மத்திய அரசுக்கு சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், மத அடிப்படையில் மக்களை மத்திய அரசு பிளவுபடுத்த முயற்சி செய்வதாகவும், தொடர்ந்து, அரசியல் சட்டத்தை மத்திய அரசு அவமதிப்பதாகவும் அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்தார்.