தமிழகத்தில் 26ஆம் தேதி 5 நிலைகளைக் கொண்ட சூரிய கிரகணம்! ஆபத்தா?-SPECIAL ARTICLE
By Arul Valan Arasu | Galatta | 01:31 PM
தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி 5 நிலைகளைக் கொண்ட சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளதை முன்னிட்டு, பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. குறிப்பாக. அன்று யாரும் வௌியே வரக்கூடாது, எதுவும் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் கூறப்படுகின்றன.
இந்த வதந்திகளுக்கு ஒரு காரணமும் உண்டு. இந்த சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் தெரியும் என்பதால், உலகில் உள்ள ஒட்டுமொத்த வானியல் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், தமிழகத்துடன் சேர்த்து, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வளைய வடிவ சூரிய கிரகணம் தெரியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளன.
அதென்ன வளைய வடிவ சூரிய கிரகணம்? என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும்..
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வரும்போது, அதனுடைய நிழலானது, பூமியின் மீது விழும் நிகழ்வே சூரிய கிரகணம். இது சாதரான சூரிய கிரகணமாகும்.
அதே நேரத்தில், சூரியன் முழுவதும் நிலவால் மறைக்கப்படும்போது ஏற்படுவது, முழு சூரிய கிரகணமாகும்.
மேலும், மையப்பகுதி மட்டும் மறைக்கப்பட்டு, சூரியனின் விளிம்பு பிரகாசிப்பது வளையச் சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என்றும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட இந்த அறிவியல் அதிசயமானது, வரும் 26 ஆம் தேதி வானில் நிகழ உள்ளது. குறிப்பாக, கிழக்குப் பகுதியில் உதயமாகும் சூரியனை, மேற்கு பக்கத்திலிருந்து நிலவு மறைக்கிறது.
மிகச் சரியாகக் காலை 8 மணிக்குத் தொடங்கும் இந்த அறிய நிகழ்வானது. பகல் 11 மணி 11 நிமிடங்கள் வரை நீடிக்கிறது. இதனால், 3 மணி நேரம் 11 நிமிடங்கள், இந்த அறிய நிகழ்வு வானில் நிகழ உள்ளது.
சூரியனை, நிலவு மறைப்பதால், அந்த நேரத்தில், வானில் தோன்றும் நெருப்பு வளையத்தைக் காலை மிகச் சரியாக 9.35 மணிக்கு 2 நிமிடங்கள் வரை காண முடியும் என்றும், அதன் பிறகு நிலவு விலகத் தொடங்கிவிடும் என்றும் வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இந்த சூரிய கிரகணம் 5 நிலைகளைக் கொண்டுள்ளதாக அறிஞர்கள் கூறியுள்ளனர்.
* அதன்படி, சூரியனை நிலவு தீண்டும் நிலையை, ஸ்பரிசம் என்று வானிலை ஆய்வாளர்கள் வர்ணிக்கிறார்கள். இது முதல் நிலையாகும்.
* இரண்டாவது நிலையானது, சூரியனுக்குள் முழுமையாக நிலவு சென்று விடும் என்றும் கூறப்படுகிறது.
* மூன்றாவது நிலையானது, பெரும்பாலும் சூரியன், நிலவால் மறைக்கப்பட்டு அதன் விளிம்பு பிரகாசிப்பதாகும்.
* நான்காவது நிலையானது, சூரியனிலிருந்து நிலவு விலகத் தொடங்குவதைக் குறிக்கிறது.
* அதேபோல், கிரகணம் முழுமையாக விலகுவது, ஐந்தாம் நிலை என்று வானியல் ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
* மேலும், தமிழகத்தில் உதகை, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளில் மட்டுமே வளையச் சூரிய கிரகணம் தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் தான், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் வானியல் ஆய்வாளர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார்கள்.
அதே நேரத்தால், இந்தியா முழுமைக்கும் சூரிய கிரகணத்தின் பிறை வடிவத்தை மட்டுமே காண முடியும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சூரிய கிரகணத்தின்போது, யார் வேண்டுமென்றாலும் வௌியே வரலாம் என்றும், திறந்த வெளியில் உணவு உண்ணலாம் என்றும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதனால், யாரும் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.