ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் வழக்கு.. பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வர் உட்பட 5 பேருக்கு சம்மன்..!
By Aruvi | Galatta | May 25, 2021, 05:05 pm
ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் விவகாரத்தில், பிஎஸ்பிபி பள்ளியின் முதல்வர் உட்பட 5 பேர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
சென்னை கே.கே. நகரில் மிகவும் பிரபலமான பள்ளியாக செயல்பட்டு வரும் பத்மசேஷாத்ரி பள்ளி என்று அழைக்கப்படும், பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன், அங்கு வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொண்டதாகத் தொடர்ந்து அடுத்தடுத்து புகார் எழுந்தது.
இந்த புகாரை உறுதி செய்யும் வகையில், மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வரும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திடீரென்று போர்க்கொடி தூக்கி புகார் கடிதம் அளித்தனர்.
அந்த கடிதத்தில், “சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்கிறார் என்றும், அவர் பாலியல் ரீதியில் மாணவிகளை அணுகுகிறார் என்றும், அவரின் செயல்பாடுகள் மாணவிகளை மனதளவில் வேதனைக்கு உள்ளாக்குகிறது” என்றும், முன்னாள் மாணவர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி
அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த புகாரின் பேரில், மடிப்பாக்கத்தில் இருந்த ஆசிரியர் ராஜகோபாலை அழைத்துச் சென்ற போலீசார். சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று மாலை 4 மணி வரை அவரிடம் நடந்த விசாரணையில், அவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்த பள்ளியில் உள்ள மேலும் சில ஆசிரியர்களும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்தார் என்ற தகவலும் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னை அசோக் நகர் மகளிர் காவல் துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
மிக முக்கியமாக, பத்மசேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் குழுவில், ராஜகோபலனும் ஓர் உறுப்பினர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், போலீசார் இன்னும் அதிர்ச்சியடைந்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, சென்னை எழும்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் வீட்டிற்கு. ஆசிரியர் ராஜகோபாலன் அழைத்துச் செல்லப்பட்டார். நீதிபதியிடம் ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தை போலீசார் தாக்கல் செய்தனர்.
அதனை விசாரித்த நீதிபதி முகமது பரூக், ஆசிரியர் ராஜகோபாலனை ஜூன் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, பாலியல் புகாரில் சிக்கி உள்ள பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், அந்த பள்ளியின் முதல்வர் உள்ளிட்ட 5 பேருக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
அதன் படி, பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளியின் முதல்வர், நிர்வாகி, இச்சம்பவம் குறித்து முதலில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவி, முதன்மை கல்வி அலுவலர் ஆகிய 5 பேருக்கும், குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தற்போது சம்மன் அனுப்பி உள்ளது.
அந்த சம்மன் படி, “குறிப்பிட்ட 5 பேரும், வருகிற ஜூன் 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு” அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, தி. நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் பத்மசேஷாத்ரி பள்ளி தலைமை ஆசிரியர் கீதா கோவிந்தராஜன், பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோர் தற்போது விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.