அணையிலிருந்து நிரம்பி வழியும் நீர்! - சீனாவில் அடுத்த பிரச்னை
By Nivetha | Galatta | Aug 27, 2020, 08:19 pm
சீனா என்று சொன்னால், இன்று உலகமே பயப்படும் நிலைதான் இருக்கிறது. காரணம், கொரோனா வைரஸ். வூஹானில் தொடங்கிய கொரோனா, இப்போது உலகையே கட்டிப்போட்டுக் கொண்டு இருக்கிறது. சீனாவுமேகூட, இன்னமும் கொரோனாவிலிருந்து மீளவில்லை. இருப்பினும், அதற்குள் அங்கே அடுத்த பிரச்னை தலைதூக்க தொடங்கியுள்ளது.
அதன்படி சீனாவின் த்ரீ கார்ஜஸ் அணையில் இதுவரை இல்லாத அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
உலகின் 3வது மிகப்பெரிய அணையான த்ரீ கார்ஜஸ் அணை, சீனாவின் யாங்சி நதியின் குறுக்கே அமைந்துள்ளது. கடந்த 1994-ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப் பணிகள் 10 ஆண்டுகளுக்கு பிறகு 2006-ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.
181 மீட்டர் (607 அடி) உயரம், 2,335 மீட்டர் நீளம் (7,660 அடி) கொண்ட இந்த அணையை கட்டிமுடிக்க 28.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளன. இதில் 175 மீட்டர் (574 அடி) உயரத்திற்கு தண்ணீர் தேங்கிவைத்துக்கொள்ளும் அளவிற்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மிகப்பெரிய கட்டுமானம் கொண்ட அணையாக இருப்பதாலும், அதிக கொள்ளவிலான நீரை தேக்கிவைப்பதாலும் கட்டுமானத்தில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், தண்ணீரின் அழுத்தத்தால் நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வல்லுநர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
அணையின் கொள்ளளவு முழு அளவை எட்டுவதற்கு முன்பே நீரின் அழுத்தத்தால், ஒருசில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு பெய்த தொடர் கனமழையால் இந்த ஆண்டு மட்டும் 5 முறை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் சூழல் ஏற்பட்டது. இதனிடையே இதுவரை இல்லாத வகையில் தற்போது அணையில் அதிக அளவிலான தண்ணீர் நிரம்பியுள்ளதால், கடந்த 2 நாட்களாக அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
அணையின் முழு கொள்ளளவான 175 மீட்டரில், 167.7 மீட்டர் அளவிற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை கட்டுமானத்தில் சேதம், நிலச்சரிவு போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், அணையிலிருந்து விநாடிக்கு 48,800 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் யாங்சி நதியில் முனெப்போதும் இல்லாதவகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யாங்சி நதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஜூலை மாதம் முதல் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. மேலும் தற்போது மேலும் திறந்துவிடப்பட்டுள்ள நீரால் பலர் தங்களது உடமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 219 பேர் மாயமாகியுள்ளதாக சீன செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை தேடும் பணி 2 நாட்களாக நடைபெற்று வருவதால், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மற்ற எந்த ஆண்டுகளிலும் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான சேதங்களை இந்த வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 260 கோடி அமெரிக்க டாலருக்கு நிகரான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 63 மில்லியன் மக்கள் யாங்சி நதிக்கரையோரப் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அணையில் நீரால் இந்த ஆண்டு முழுவதுமே சீன மக்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.
சீனாவை போலவே தொடர் சிக்கல்களை சந்தித்த இந்திய மாநிலமாக கேரளா இருந்து வருகின்றது. இப்போதுதான், கேரளா மக்கள் சற்று மூச்சுவிடத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.