“நித்தியானந்தா தான் என் வழிகாட்டி, என் ரோல்மாடல்” என்று சீமான் கலகலப்பாகப் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் இணையதள பாசறை விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கத்தை விட, மிகவும் கலகலப்பாகப் பேசி, தனது தம்பிகளை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.
அதன்படி பேசிய சீமான், “இங்க பார்ப்பேன், எதுவுமே சரியில்லைனா, இருக்கவே இருக்கார் என் வழிகாட்டி நித்தியானந்தா, அவர் தான் என் ரோல் மாடல்” என்று சொல்லி முடிப்பதற்குள், அவருடைய சக தம்பிமார்களும் சிரிக்க, அவரும் மேடையிலேயே கலகல வென்று சிரித்துவிட்டார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவர், நித்தியானந்தாவை பின்பற்றி 200, 300 கோடி ரூபாய் செலவில் 10, 20 தீவுகளை விலைக்கு வாங்கி, அங்கே தமிழ் பேசுபவர்களைக் குடி அமர்த்துவேன்” என்று கலகலப்பாகப் பேசினார்.
அந்த தீவு வாங்க, ரஜினி நடித்த சிவாஜி படப் பாணியில் பணம் இருப்பவர்களைத் தனி அறையில் வைத்து, சிவாஜி பட பாணியில் பணம் வசூலிப்பதாகவும் நகைச்சுவையோடு பேசி, அனைவரையும் சிரிக்க வைத்தார்.
அதேபோல், “ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் தமிழர்களுக்கு, நான் ஆட்சிக்கு வந்ததும்.. அடி இருக்கிறது” என்றும் சீமான் நகைச்சுவை கலந்த எச்சரிக்கையோடு பேசினார்.
" தமிழிலில் பேசும்போது 'S, So, But, Actually' என்று பேசுபவர்களுக்கு, அதன் பிறகு வார்த்தைகள் வராது என்றும், அவர்களுக்குத் தெரியாது” என்றும் காமெடியாக பேசி, அனைவரையும் சிரிப்பலையில் மீண்டும் ஆழ்த்தினார்.
குறிப்பாக, “ரஜினியை இழிவாகப் பதிவிடுவது தவறு என்று தன்னுடைய கட்சினருக்கு சீமான், அறிவுரை கூறினார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் மீது நான் அளப்பரிய மரியாதை வைத்திருப்பதாகவும், அவர் கர்நாடகம் அல்லது மராட்டியத்தில் கட்சி தொடங்கினால், அவரை வாழ்த்திப் பேச நான் தயாராக இருப்பதாகவும்” தெரிவித்தார்.
அத்துடன், “என் திருமணத்திற்கு ரஜினிகாந்த், கைப்பட எழுதிய வாழ்த்து கடிதத்தை, நான் இன்று வரை பத்திரமாக வைத்திருப்பதாகவும்” சீமான் நினைவுகூர்ந்தார்.
இதனிடையே, சீமானின் இந்த கலகல நகைச்சுவை பேச்சு, இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.