சாத்தான்குளம் 8 வயது சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. பாலியல் துன்புறுத்தல் இல்லை..!
By Aruvi | Galatta | Jul 17, 2020, 01:01 pm
சாத்தான்குளம் சிறுமி கழுத்து இறுக்கப்பட்டுதான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அடுத்த வடலி விளை இந்திரா நகரைச் சேர்ந்த சேகர் என்பவரின் 8 வயது மகள், அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சிறுமி வீட்டில் இருந்து வந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் அந்த சிறுமி 4 ஆம் வகுப்பு படிக்க இருந்தார்.
ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி காலையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, தன் வீட்டின் அருகிலேயே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அதன் பிறகு, அந்த பகுதியில் உள்ள தனக்குத் தெரிந்தவரின் வீட்டில் டி.வி. பார்த்து விட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு, சிறுமி வீடு திரும்ப வில்லை. மதியம் சாப்பாட்டிற்குக் கூட சிறுமி வரவில்லை என்று, சிறுமியின் தயார் அவரை தேடி வந்துள்ளார். சிறுமியின் தாயாருக்குச் சற்று காது சரியாகக் கேட்காது என்று கூறப்படுகிறது. எனினும், தன் பெண் குழந்தையைத் தேடி, அந்த கிராமம் முழுவதும் அந்த தாய் அலைந்துள்ளார்.
சிறுமி எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், தன் உறவினர்கள் உதவியுடன் ஊர் முழுக்க சிறுமியைத் தேடி வந்துள்ளார். அப்போது, அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியைத் தேடிச் சென்ற போது, சிறுமியின் உடல் அங்குச் சடலமாகக் கிடந்துள்ளது.
அந்த காட்டுப் பகுதியில் சிறுமியின் உடலானது தண்ணீர் டிரம்மில் மூடி வைக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக, சிறுமி கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், சிறுமியின் தயார் இதனைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். இது தொடர்பாகச் சாத்தான் குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியின் உதடுகளில் ரத்த காயங்கள் இருப்பதால், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் உள்பட இருவரை போலீசார் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அந்த இருவரில் ஒருவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், மற்றொருவர் போதைக்கு அடிமையாகி இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர் என்றும் செய்திகள் வெளியானது. அந்த 2 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், சிறுமியின் உடலை வாங்க மறுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிறுமியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்குப் பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, அந்த பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் படி, “8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை எனப் பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. “சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.
மேலும், “சிறுமியைக் கொலை செய்ததைக் கைது செய்யப்பட்ட முத்தீஸ்வரன் ஒப்புக் கொண்டுள்ளார் என்றும், அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்” தெரிவித்தார்.
இதனையடுத்து, “கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் சம்மதம்” தெரிவித்தனர். சிறுமியின் பெற்றோர் உடன் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. முன்னதாக, சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து இருந்தனர். திருச்செந்தூர் கோட்டாட்சியர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.