“இனி நீங்க போலீஸ் இல்ல பொறுக்கி!” தீ பிழம்பாய் எரியும் இந்திய பிரபலங்களின் கண்டன குரல்கள்!
By Aruvi | Galatta | Jun 27, 2020, 11:31 am
சாத்தான்குளம் லாக்கப் டெத் விவகாரத்தில் “இனி நீங்க போலீஸ் இல்ல பொறுக்கி” என்ற தொனியில் இந்திய பிரபலங்கள் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டன குரல்களைப் பதிவு செய்து வருவது தீ பிழம்பாய் பரவி வருகிறது.
“சாமி” படத்தில் வரும் மிகவும் பிரபலமான டயலாக் “நான் போலீஸ் இல்ல பொறுக்கி”. அதே வசனம், “சாமி-2” பாகத்தில் வரும் போது, “நான் போலீஸ் இல்ல, பூதம்” என்று நடிகர் விக்ரம் வசனம் பேசுவார்.
சினிமாவில் வந்த இந்த வசனம், தமிழகத்தில் தற்போது உண்மையாகிவிட்டது. ஆம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இந்தியா முழுவதும் பரவியது. அத்துடன், இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாலேயே ஜெயராஜ் - பென்னிக்ஸ் உயிரிழந்ததாகவும், அவர்களது உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு, தீ பிழம்பாய் இந்தியாவையும் தாண்டி, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. இதனால், உலக தமிழர்கள் எல்லாம் கொந்தளித்துள்ளனர்.
இதனிடையே, எந்த சினிமா, “நான் போலீஸ் இல்ல பொறுக்கி” என்று வசனம் வைத்ததோ, அதே சினிமா உலகம், இன்று “பொறுக்கியாக மாறிப்போன போலீசாரை” தண்டிக்க வேண்டும் என்று பகிரங்கமான கண்ட குரல்களைப் பதிவு செய்து “போர்க் கொடி” தூக்கி உள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என்று பல்வேறு தரப்பினரும் "Justice For Jeyaraj And Fenix" என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
அதன்படி, “மனிதம் எங்கே?” என்று சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு குறித்து, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பி உள்ளார். “அடிப்பவனுக்குத் தேவை ஆயுதம். வலிப்பவருக்குத் தேவை காரணம். இனத்துக்காக மதத்துக்காக நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் - மகனும். கடந்து செல்வது எளிதல்ல. நீதி கிடைக்காமல் மறந்து வெல்வது மனிதமல்ல, மனிதம் எங்கே? என்று, ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.
கிரிக்கெட் வீரர் அஸ்வின், “ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. இந்த கொடூரச் செயலுக்கு நீதி கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். நீதி கிடைத்தாலும், அது அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்குமா என்பது தெரியவில்லை. இது போன்ற ஒரு ஹேஷ்டேக்யை நாம் பயன்படுத்துவது இதுவே இறுதியாக இருக்க வேண்டும்” என்றும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், “சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளான தந்தை மகனுக்கு நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்” என்று, தனது டிவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார்.
கவிஞர் வைரமுத்து, “குற்றவாளிகளுக்கே கூட மரண தண்டனை கூடாது என்று குரல் எழுப்பும் கால கட்டத்தில் சாத்தான் குளத்தில் குற்றமற்றவர்கள் மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டது ஒவ்வோர் இதயத்திலும் இறங்கிய இடியல்லவா? அறத்தின் வினாவுக்கு நீதி விடை சொல்ல வேண்டும்” என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, “தமிழ்நாட்டைப் பரபரப்புக்கு உள்ளாகியுள்ள வியாபாரிகள் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” என்பதை வலியுறுத்தி தனது சமூகவலைத்தளத்தில் அவர் கண்டன பதிவு செய்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ், “ஜெயராஜ் - பென்னிக்ஸ்க்கு நடந்த கொடூரத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கொரோனா காலத்தில் இரவு பகலாக உழைக்கும் காவல் துறையினருக்கு நேர்ந்த அவமானம் இது. தவறு செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஷால், “ஜெயராஜ் - பென்னிக்ஸ்க்கு நடந்த கொடூரத்தில் அநீதி இழைக்கப்பட்டது ஏன்? என்பதை தெரிந்கொள்ள நமக்கு உரிமை உண்டு. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் வரை நாம் இந்த சம்பவத்தை மறந்து விடக்கூடாது. இடமாற்றம் என்பது தண்டனை அல்ல, நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம்” என்றும், தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
விஷ்ணு விஷால், “கொடூர தாக்குதல்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்கள். அனைத்து உயிர்களும் விலைமதிப்பற்றவை” என்றும், தனது கண்டன குரலைப் பதிவு செய்துள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ், “பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நீதி வழங்காவிட்டால், அந்த சமூகம் தனக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன், “தூத்துக்குடியில் ஜெயராஜ் - பென்னிக்ஸ்க்கு நடந்த கொடூரத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார். காவல் துறையினரின் இந்த கொரூர செயல் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. மனிதாபிமானமற்றது” என்றும், தனது பகிரங்கமாகக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
நடிகை ராஷி கண்ணாஈ “காவல் துறை உடையில் இருந்த இரக்கமற்றவர்களால் இந்த கொடூரம் நடந்துள்ளது. சட்டத்திற்கு மேல் யாரும் இருக்கக்கூடாது. இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தனது கண்டனத்தைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
நடிகை வரலக்ஷமி சரத்குமார், “சாத்தான்குளம் காவல் துறையினரின் நடத்தையைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி வேண்டும். இந்த சம்பவத்தை வைத்து நாம் முழு காவல் துறையையும் குறை கூற முடியாது. ஆனால், அந்த இரண்டு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பாடகி சுசித்ரா, “இந்த விவகாரம் தென்னிந்தியாவில் முடிந்து விடக்கூடாது” என கூறி, நடந்த வற்றை ஆங்கிலத்தில் பேசி வலை தளங்களில் பதிவேற்றி இந்தியா முழுக்க உள்ள திரை நட்சத்திரங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதன் காரணமாக, #JusticeforJayarajAndFenix என்ற பெயரில் ஒரு ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகத் தொடங்கியது. இந்தியா முழுக்க உள்ள திரை நட்சத்திரங்களும் தங்களது கண்டனங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
இதனையடுத்து, பாலிவுட் நட்சத்திரங்களான ரித்தேஷ் தேஷ்முக், சம்யுக்தா ஹெக்டே என பலரும் காவல் துறைக்கு எதிராக தங்களது கண்டன குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
முன்னதாக ஜெயராஜ் - பென்னிக்ஸ்க்கு நடந்த கொடூர செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் பா. ரஞ்சித், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சாந்தணு, நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை ஹன்சிகா, நடிகை குஷ்பூ, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரை உலக பிரபலங்கள் தங்களது கண்டன குரல்களைப் பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.