சிறையில் இருந்து சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுதலை ஆகலாம்! ஏன் தெரியுமா?
By Aruvi | Galatta | Nov 20, 2020, 12:49 pm
சிறையில் இருந்து சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தின் போது, கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தின் போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு, கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று, தனி நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் செய்த மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, தண்டனை ரத்து செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இறுதியில், நீதிபதி மைகேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா உயிரிழந்ததால், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதன்படி, குற்றச்சாட்டுக்கு ஆளான சசிகலா உட்பட 3 பேரும், பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
அத்துடன், கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் 3 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களாகச் சிறை தண்டனையை, சசிகலா தற்போது அனுபவித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், “அபராத தொகையை செலுத்தினால் சசிகலா, வருகிற ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும், அபராதத்தை கட்ட தவறினால், அவர் மேலும் ஒரு ஆண்டு காலம் சிறையிலேயே தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்றும், சிறை நிர்வாகம் கூறியிருந்தது.
இதனையடுத்து, அபராதத் தொகையான 10.10 கோடி ரூபாயை வரையோலையாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு
செலுத்தியது. இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சசிகலாவை சிறையில் இருந்து விடுவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், அவரது வழக்கறிஞர் மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காகவே, சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன், பெங்களூருவில் முகாமிட்டு அனைத்து பணிகளையும்
மேற்கொண்டு வருகிறார்.
மேலும், கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஜி.பி, டி.ஐ.ஜி. ஆகியோரை சந்தித்து நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகை காலத்தை அளித்து, அவரை விடுவிக்க வேண்டும் என்றும், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அதற்கு அவர்கள், “பரப்பன அக்ரஹார சிறைத்துறை முதன்மை கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளிக்கும் படி” கூறியதை தொடர்ந்து, வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று முதன்மை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று முதன்மை கண்காணிப்பாளர் பதில் அளித்து உள்ளார்.
இது தொடர்பாக பேசிய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், “வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா, விடுவிக்கப்படுவார் என்று ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறை அறிவித்துள்ளது. அதன் படி, இன்னும் 68 நாட்கள் மட்டுமே சசிகலா சிறையில் இருக்க வேண்டியது உள்ளது. சசிகலாவை பொறுத்தவரை, நன்னடத்தை விதிகளின் கீழ் அவருக்கு 129 நாட்கள் சலுகை உள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவர்களுக்கு கர்நாடக மாநில சிறைத்துறை சலுகை வழங்கியது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளோம்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.
அத்துடன், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு சலுகை வழங்குவதில் எந்த தடையும் இல்லை என்றும், மாநில அரசு உரிய முடிவெடுக்கலாம் என்றும், உள்துறை அளித்த பதில் கடிதத்தையும் ஆதாரமாக அளித்துள்ளோம் என்றும், அதேபோல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்புகளில் கூட தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளதையும் நாங்கள் சுட்டிக்காட்டி” உள்ளோம், என்றும் அவர் கூறினார்.
“ 'இதையெல்லாம் பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும்' என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது என்றும். தனது சகோதரர் இறுதி சடங்கில் கூட சசிகலா
கலந்து கொள்ள முடியவில்லை என்பது போன்று பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி, தாமதமின்றி முடிவெடுக்க வலியுறுத்தி உள்ளோம் என்றும், இதனால்,
நல்ல முடிவினை விரைவில் எதிர்பார்க்கலாம்” என்றும், அவர் கூறினார். இருக்கும் என்று நம்புகிறோம்.
இதனிடையே, சசிகலா விடுவிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை கர்நாடக சிறைத்துறை தீவிரமாக பரிசீலித்து
வருவதால், சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.