அதிமுகவுக்கு எதிராக உள்ளாட்சித் தேர்தல் எதிரொலிக்கும்! - எஸ்.ஏ.சந்திரசேகர்
By Arul Valan Arasu | Galatta | 04:38 PM
அதிமுகவுக்கு எதிராக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட மசோதாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த வாரம் நடிகர் சித்தார்த், குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தமைக்கு நடிகை காயத்ரி ரகுராம் பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதேபோல், கடந்த வாரம் நடிகை குஷ்பு கூறிய கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில், நடிகை கஸ்தூரி பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அவர், “இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்தச் சூழலில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவிற்கு தேவையில்லை. மத்திய அரசு இதுகுறித்து மக்களிடம் இதுவரை விரிவாக ஏன் விளக்கம் அளிக்கவில்லை?
எந்த வித பாதிப்பும் இல்லை என்று கூறும் மத்திய அரசு, எதற்காக இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளது? இந்தியாவில் மதவாத ஆட்சிக்கு பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. அது ஒருபோதும் நடக்காது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்திருப்பதால், தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அது, அதிமுக அரசுக்கு எதிராகவே எதிரொலிக்கும் என்றும் சூடாகப் பதில் அளித்தார்.