வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி!
By Aruvi | Galatta | May 15, 2020, 05:09 pm
வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்தார்.
அதன்படி, பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டத்தின் 3 ஆம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது வெளியிட்டார்.
“தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும், இதில் 11 திட்டங்களில் 8 திட்டங்கள் விவசாயத்துறை உட்கட்டமைப்புக்காக இருக்கும்” என்றும் கூறினார்.
“நாடு முழுவதும் ஊரடங்கின் போது, உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்காக 74,300 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஊரடங்கின் போது விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்று மேற்கொள் காட்டினார்.
“பிரதமரின் கிஷான் திட்டத்தில் 18,700 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்றும், பீம் யோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு 64 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது” என்றும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, “விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், குளிர்சாதன கிடங்கள் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளுக்கு நிதி செலவிடப்படும்” என்றும், நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும், “10 ஆயிரம் கோடி சிறு குறு உணவு தொழிற்சாலை நிறுவனங்களுக்கு வழங்கப்படும், உள்ளூரில் தயாரிப்போம் திட்டத்திற்காக இந்த தொகை செலவிடப்பட உள்ளதாகவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
“கால்நடை நோய்த் தடுப்பு சிகிச்சைக்காக 13,343 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், 53 கோடி கால்நடைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடப்படும்” என்றும், கூறினார்.
“மீன்வள மேம்பாட்டிற்காக 11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மீன்பிடி துறைமுகம், மீன் சந்தைகளுக்கு உள்கட்டமைப்புகளுக்கு 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு” செய்யப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டார்.
மேலும், “மீன் ஏற்றுமதி வர்த்தகத்தை 1 லட்சம் கோடியாக அதிகரிக்கத் திட்டம் உள்ளதாகவும், கூடுதலாக 70 லட்சம் மீன் உற்பத்தியை எட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
மூலிகை பொருட்கள் உற்பத்திக்காக 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை விவசாயம் அடுத்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும்” என்றும், நம்பிக்கைத் தெரிவித்தார்.
“விவசாயிகள் பயன்பெற நேரடி கொள்முதல் செய்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு” செய்யப்படுவதாகத் தெரிவித்த நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் விளையும் மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றைச் சர்வதேச அளவுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
“குறு உணவு உற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்த 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், பிராந்திய வேளாண் பொருட்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கைத் தெரிவித்தார்.