மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! - ரஜினி ஆவேசம்
By Aruvi | Galatta | 12:19 PM
துக்ளக் விழாவில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு விழா, கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வு குறித்தும், அப்போது தந்தை பெரியார் செய்த செயல்கள் குறித்தும் பேசினார்.
இந்த செய்தி, தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது. இதற்குத் திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக ரஜினிகாந்த் மீது பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அத்துடன், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “துக்ளக் விழாவில் பெரியார் பற்றிப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் கேள்விப்பட்டதையும், பத்திரிக்கைகளில் வெளியானதையுமே கூறினேன். கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த பேரணி குறித்து இல்லாத குற்றச்சாட்டு எதையும் நான் கூறவில்லை. 2017 ஆம் ஆண்டு, அவுட்லுக் பத்திரிக்கையில் வந்ததைத்தான் நான் பேசினேன்.
1971 ஆம் ஆண்டு, நடந்த பெரியார் பேரணியில், ராமர் படத்திற்குச் செருப்பு மாலை அணிந்தது உண்மைதான்.
ராமர், சீதை உருவங்கள் உடை இல்லாமல் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது, பத்திரிக்கையில் வெளிவந்தது. இது மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம்” என்று கூறினார்.
இதனிடையே, 1971 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து ஆதாரமாக துக்ளக்கைக் காட்டாமல், அவுட்லுக்கை ரஜினிகாந்த் காட்டியது ஏன்? என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி எழுப்பி உள்ளார்.