“ரஜினிகாந்த் ஏன் தெரியுமா கட்சி தொடங்கவில்லை?” என்பதற்கு, சில காரணங்கள் வெளியாகி உள்ளன.

“நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று, நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்தார். 

மேலும், “இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்” என்று, அவர் குறிப்பிட்டு 
இருந்தார்.

அத்துடன், “மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் கரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள், அது வீண் போகாது, அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்” என்றும், கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, “என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால், நாலு பேர் நான்குவிதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக, என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்கவிரும்பவில்லை” என்றும், ரஜினிகாந்த் மிகவும் உருக்கமாக கூறியிருந்தார்.

அதே நேரத்தில், கட்சி வேலைகளை கடந்த சில மாதங்களாகவே வேகமாக செய்து வந்த நிலையில், இப்போது திடீரென்று பின் வாங்க என்ன காரணம் என்று, பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரஜினிகாந்த் அரசியலில் இருந்து பின் வாங்கியதற்கு சில காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதாவது, மருத்துவர்களின் அறிவுரைகளையும் மீறி “அண்ணாத்த” படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஐதராபாத் சென்ற நடிகர் ரஜினிகாந்த், சுமார் 120 பேர் கொண்ட 
படக்குழுவினருக்கு மத்தியில் தினமும் கொரோனா பரிசோதனை செய்து, ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முகக்கவசம் அணிவித்து மிகவும்  எச்சரிக்கையாகவே தினமும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்தார். ஆனாலும், இப்படி பாதுகாப்பாக இருந்தும், அங்கு 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது.

இதனால், உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, நடிகர் ரஜினிக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது. ஆனால், அவருக்கு ரத்த கொதிப்பில் ஏற்றத்தாழ்வு இருந்துள்ளது. அப்படி இருந்தால் அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக மாற்றப்பட்ட மாற்று சிறுநீரகம் மிக கடுமையாகப் பாதிக்கப்படும். 

இதன் காரணமாக, 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இதனால், முதலில் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதை ஆண்டவன் தனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாத் தான் தான் பார்க்கிறேன் என்றும், ரஜினி சுட்டிக்காட்டினார்.

அதே நேரத்தில், கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி “அண்ணாத்த” படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்ற ரஜினியுடன் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் தான் துணைக்கு உடன் சென்றிருக்கிறார். 

அதே போல், நடிகர் ரஜினிகாந்த், கொரோனா பரவல் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட போதும், அப்பல்லோ மருத்துவமனையிலும் கூட ஐஸ்வர்யா தான் உடன் இருந்து அவரை கவனித்துக்கொண்டு இருந்துள்ளார்.

குறிப்பாக, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்திலும் இருந்த தந்தை ரஜினியிடம், “இந்த சூழல் நிலையில், அரசியல் வேண்டாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டால் அது இன்னும் பெரும் ஆபத்தை உங்களுக்கு உண்டாக்கி விடும்” என்று, அன்போடு அப்பாவை எச்சரித்திருக்கிறார்.

முக்கியமாக, “இப்போதைக்கு அரசியல், கட்சிப்பணிகள் என எங்கேயும் வெளியே போக வேண்டாம். கட்சி, அரசியல் என யோசிப்பதால் தான் உங்களுக்கு அதிக ஸ்ட்ரெஸ் கூடுவதோடு, ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால், இப்போது உங்களுக்கு அரசியல் வேண்டாம் பா ப்ளீஸ்” என்று, மகள் ஸ்தானத்தில் அவர் தனது தந்தையிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. 

இன்னும் குறிப்பாக, ரஜினியின் 2 ஆம் மகள் செளந்தர்யாவும், ரஜினியிடம் இதே கோரிக்கையை அன்பாக கூறி, தந்தையின் மனதை மாற்றியிருக்கிறார். 

இப்படியகா, ரஜினிகாந்தின் மகள்கள் இருவருமே, “அப்பா, உங்கள் உடல் நிலை தான் எங்களுக்கு முக்கியம். மற்ற எந்த விஷயத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டாம்” என்று, ரஜினியிடம் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனால், அவர் இன்னும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வந்தார். 

அது நேரத்தில், வரும் ஜனவரி மாத்தில் கட்சி தொடங்கும் நாள் பற்றி டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பேன் என்று கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அறிவித்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்த நிலையில், இப்போது ஏற்பட்டிருக்கும் உடல் நலப்பிரச்னைகள், தனது இரு செல்ல மகள்களின் வேண்டுகோள் என அனைத்தையும் பரிசீலித்துப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இந்த அரசியல் பின்வாங்கும் முடிவை அதிரடியாக அறிவித்துள்ளார் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.