“ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை?” புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரத்தில் முற்றும் நெருக்கடி
“புளியந்தோப்பு குடியிருப்பு கட்டடத்தில் தொட்டாலே உதிரும் அளவுக்கு மிக மோசமாக இருப்பதால், ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை” என்று, சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளது, அதிமுகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் குடியிருப்பு விவகாரம் தரமற்ற முறையில் கட்டப்பட்டது வெட்ட வெளிச்சமான நிலையில், இந்த விவகாரம் தற்போது தமிழக
அரசியலில் புதிய புயலை கிளப்பி உள்ளது.
இதனால், கடந்த அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது, தமிழக அரசின் நடவடிக்கை பாயும் நிலை தற்போது உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
புளியந்தோப்பு கேசவன் பிள்ளை பூங்கா பகுதியில் தமிழக அரசால் ஏற்கனவே கட்டித் தரப்பட்ட வீடுகள் பழுதடைந்த காரணத்தால், அந்த வீடுகளை இடித்து விட்டு புதியதாகக் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மொத்தம் 250 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 1,900 வீடுகள் கட்டுவது என்பது திட்டம் போடப்பட்டது.
அதன் படி, முதல் கட்டமாக 112 கோடி ரூபாய் செலவில் 864 வீடுகள் கட்டப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஆனாலும், இந்த வீடுகள் சம்மந்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக, கொரோனா தொற்று பரவல் நேரத்தில், இந்த வீடுகள் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கான வார்டாகவும் மாற்றப்பட்டது.
இதனையடுத்து, கடந்த ஆண்டு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், அந்த வீட்டின் தற்போதைய நிலையில் 100 குடும்பங்கள் இந்த குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.
அதே நேரத்தில், இந்த வீடுகள் அனைத்தும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக, பொது மக்கள் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் மற்றும் தரமற்ற முறையில் கட்டப்பட்ட வீடுகள் தொடர்பான வீடியோக்கள் அனைத்தும் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் அதிமுகவிற்கு பெரும் தலைவலியாக மாறும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தான், புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சிதிலமடைந்தது தொடர்பாக ,இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் தொடர்பாக எழும்பூர் தொகுதி உறுப்பினர் பரந்தாமன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் செல்வ பெருந்தகை ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.
அந்த தீர்மானத்தின் மீது பேசிய எம்எல்ஏ பரந்தாமன், “குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக பொது மக்கள் புகார் எழுந்துள்ளதால், இதனைக் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன் என்றும், இந்த கட்டடம் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது” என்றும், குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், “தொட்டால் சிணுங்கி நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தொட்டாலே உதிரும் கட்டிடம் கட்டிய ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி” என்று, சுட்டிக்காட்டினார்.
“கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டிமுடித்த அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், இந்த கட்டடம் கட்டி முடித்த பிறகு இதற்கு சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, “கடந்த ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், கட்டட ஒப்பந்ததாரர் மீதும் கிரிமினல் வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த கட்டடம் முறைகேடாகக் கட்டப்பட்டுள்ளது என்றும், உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், “புளியந்தோப்பு தரமற்ற அடுக்குமாடி கட்டடம் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்” என்று, உறுதிப்படத் தெரிவித்தார்.
“கட்டுமான பணியில் முறைகேடு நடந்தது தெரியவந்தால், ஒப்பந்ததார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புளியந்தோப்பு குடியிருப்பு 112 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டார்.
மேலும், “புளியந்தோப்பு குடியிருப்பை ஆய்வு செய்ய ஐஐடி குழுவுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்றும், ஐஐடி குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அமைச்சர் தா.மோ. அன்பரசன் உறுதி அளித்தார்.