மாஞ்சா நூல் விற்பனை! - ஒரே நாளில் 55 பேரை கைது செய்த சென்னை காவல்துறை
By Nivetha | Galatta | Aug 16, 2020, 06:25 pm
மாஞ்சா நூலில் சிக்கி பல சிறுவர்களும், வாகன ஓட்டுநர்களும் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நூலைக் கொண்டு பட்டம் பறக்க விட 2007ஆம் ஆண்டு சென்னை காவல்துறை தடை விதித்தது. மீறி மாஞ்சா நூலில் பட்டம் விடுபவர்கள் மீதும், மாஞ்சா நூலை விற்பவர் மீதும் குண்டர் சட்டம் பதியப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கருணாநிதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மாஞ்சா நூல் அறுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தடை செய்யப்பட்ட பிறகும் சென்னையில் தொடரும் மாஞ்சா நூல் கலாசாரம் மக்களை கதிகலங்க வைத்துள்ளது.
கடந்த மாதம்கூட, ஆன்லைன் மூலம் மாஞ்சா நூல் விற்பனை நடந்தேறிவது தெரியவந்தது. அப்படியான சூழலில், மாஞ்சா நூல் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனாலும் விற்பனை நின்றபாடில்லை.
சமீபத்தில் சென்னையில் மூலக்கடை மேம்பாலம் சென்ற இளைஞர் மீது மாஞ்சா நூல் அறுந்து கழுத்தை அறுத்ததை அடுத்து தற்போது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 4 இடங்களில், ஒரே நாளில் மாஞ்சா நூல் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் மாஞ்சா நூல் மற்றும் பட்டம் தயாரிப்பதாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் சரவணன் அவர்களுக்கு, ஆகஸ்ட் 10ம் தேதி தகவல் கிடைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் தமிழன்பன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்நிலையில் அன்றைய தினம் மாஞ்சா நூல் தயாரித்த சென்னை பாலவாக்கம் மணிமேகலை தெருவை சேர்ந்த அப்துல் சயத் (51), பட்டம் விட்ட பிரகாஷ் (41) இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் சென்னை வியாசார்பாடி பகுதியில் மாஞ்சா நூல் செய்வதற்கான பொருட்களை வாங்கி வந்து வீட்டில் வைத்து தயார் செய்ததும், கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் மக்கள் அதிகளவு தங்களது பொழுதுபோக்கை கழிக்க பட்டங்களை பறக்கவிட வாங்கும், ஆர்வம் அதிகம் வருவதால் இதன் ஆபத்தை அறியாமல் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மாஞ்சா நூல் மற்றும் பட்டங்களை தயாரித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மாஞ்சா தூல் தயாரித்தது தொடர்பாக சயத், பிரகாஷ் இருவர் மீது வழக்கு பதிவு செய்த நீலாங்கரை போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 47 பட்டங்கள், மாஞ்சா நூல் தயாரிக்கும் கருவி மற்றும் மாஞ்சா நூலையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தற்போது சென்னையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் மேலும் 36 மாஞ்சா நூல் கண்டுபிடிக்கப்பட்டு, 164 பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாஞ்சா நூல் விற்பனை தொடர்பாக 55 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மூலக்கரை பகுதியில் சென்ற போது மாதவன் என்பவரின் கழுத்தை மாஞ்சா நூல் பட்டம் அறுத்தது. இதையடுத்து சென்னை காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுதான் மாதாவரம், பூக்கடை பகுதிகளில் சோதனையிட்ட காவல்துறையினர் தடையை மீறி மாஞ்சா நூல் விட்டதாக 55 பேரை கைது செய்தனர். மேலும், 230-க்கும் மேற்ப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் பட்டங்களை பறிமுதல் செய்தனர்.