பிரதமர் மோடிக்கு என்னதான் ஆச்சு? சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேற முடிவு!
By Aruvi | Galatta | 12:50 PM
சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளதற்கு எதிராக
‘நோ சார்’ என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
டிவிட்டரில் உலகளவில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு அடுத்த இடத்தில், பிரதமர் மோடி தான் இருக்கிறார்.
கிட்டத்தட்ட 5 கோடியே 33 லட்சம் பேர் டிவிட்டரிலும், 4 கோடியே 40 லட்சம் பேர் ஃபேஸ்புக்கில்லும், 3 கோடியே 52 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமிலும், யூ டியூபில் 45 லட்சம் பேரும் மோடியைப் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி, ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளார்.
இதற்கு, பல்வேறு தரப்பினரும், “சமூக வலைத்தளங்களிலிருந்து விலக வேண்டாம் என்றும், பிரதமர் மோடி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்னும் சிலர், “பிரதமர் மோடியைத் தொடர்புகொள்ள சமூக வலைத்தளங்கள் மட்டுமே இருப்பதாகவும், இதிலிருந்து அவர் வெளியேறினால், மக்களுடன் நேரடி தொடர்பு இருக்காது என்றும், இதனால், வெளியேற வேண்டாம்” என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, “ உண்மையிலேயே பிரதமர் கைவிட வேண்டியது வெறுப்புணர்வைத் தானே தவிர, சமூக வலைத்தளங்களை அல்ல” என்றும் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, சமூக வலைத்தளங்களிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியேற வேண்டாம் என்பதை வலியுறுத்தி பலரும் ‘நோ சார்’ என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், ‘நோ சார்’ என்ற ஹேஷ்டேக், தற்போது டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.