ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பா?
By Aruvi | Galatta | Apr 23, 2020, 11:24 am
கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவது தொடர்பாக வரும் 27 ஆம் தேதி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதால், ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுப்பிடிக்காப்படாத நிலையில், கொரோனா வைரசிடமிருந்து தப்பிக்க, தனித்து இருப்பது மட்டுமே சிறந்த வழி என்பதால், பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல் படுத்தி உள்ளன.
அதன்படி, கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் தொடர்ந்து பரவி வருவதால், முதலில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாமல், தீவிரமாகப் பரவத் தொடங்கியது.
இதனால், மே 3 ஆம் தேதி வரை 2 வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 40 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இதனைத்தொடர்ந்து, கடந்த 20 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மத்திய அரசு சில விசயங்களுக்கு மட்டும் கெடுபிடிகளை தளர்த்தது. ஆனால், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையாமல் இருந்ததால், பழைய நடைமுறையே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், வரும் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய ஆய்வுக் கூட்டமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ஊரடங்கு தொடர்பாகவும், மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, 3 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.