மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும்! முதலமைச்சர் பழனிசாமி
By Aruvi | Galatta | Apr 27, 2020, 05:05 pm
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகக் கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், தமிழக முதலமைச்சர் பழனிசாமியும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது, தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அரசுக்கு சில கோரிக்கைகள் முன்வைத்தார். அதன்படி, “தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும், இதனால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளது” என்றும், குறிப்பிட்டார்.
“தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பி.சி.ஆர். டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும்” என்று வலியுறுத்திய முதலமைச்சர் பழனிசாமி, ”தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும்” சுட்டிக்காட்டினார்.
“குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசரேஷன் பொருட்கள் வழங்க ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
“விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேளாண் உற்பத்தியாளர் அமைப்புக்கு, மத்திய அரசு போக்குவரத்து மானியம் வழங்க வேண்டும் என்றும், டிசம்பர், ஜனவரி மாதத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், “சிறு, குறு தொழில் துறையினர் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஜி.எஸ்.டி, வருமான வரி செலுத்த 6 மாத அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாயை வழங்க வேண்டும்” என்றும் பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார்.
அத்துடன், சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதேபோல், அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை, அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பதாகத் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
இதனிடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கும் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை, அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.