“கொரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் உபகரணங்களுடன் நாட்டின் பிரதமரையும் காணவில்லை” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டல் அடித்துள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கம் 2 வது அலையாக நாடு முழுவதும் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனாலும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் எல்லாம் திணறி வருகின்றன.
இதனால், “கொரோனாவை கட்டுப்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக” நாட்டில் உள்ள எதிர் கட்சிகள் எல்லாம் கடும் விமர்சனங்களைத் தொடர்ச்சியாக முன் வைத்து வருகின்றன.
அது போலவே, மத்திய அரசின் கொரோனா பரவல் தடுப்பு பணிகளைப் பற்றி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, தற்போது டிவிட்டரில் மிக கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்து உள்ளார்.
அதன் படி, “தடுப்பூசி, ஆக்ஸிஜனுடன் சேர்த்து பிரதமர் மோடியையும் காணவில்லை என்றும், மக்களுக்கு எஞ்சியிருப்பது எல்லாம் புதிய நாடாளுமன்றக் கட்டடம், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி மற்றும் இங்கும் அங்குமாக உள்ள பிரதமரின் படங்கள் தான்” என்றும், மிக கடுமையாக ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.
அத்துடன், “இன்னும் எவ்வளவு காலம் தான், மக்கள் மத்திய அரசின் கொடுமையைத் தாங்குவது” என்றும், ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அவசியம் என்று, ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்துள்ளது என்றும்; பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்றும்; ஆனால், இதற்குப் பொறுப்பானவர்கள் எங்கோ மறைந்திருக்கிறார்கள்” என்றும், ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 ஆம் அலை பாதிப்பானது, இது வரை இல்லாத அளவாக புதிய உச்சத்தில் இருப்பதால், பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன் படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 781 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 920 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால், அங்கு மிக கடுமையான கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அதே போல், பீகார் மாநிலத்திலும், மே 25 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். வரும் 15 ஆம் தேதியுடன் அங்கு பொது முடக்கம் நிறைவடைய இருந்த நிலையில், அங்கு மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் 27 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா மாநிலத்தில் வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி தொடங்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, அந்த மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் புதன் கிழமை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படியாக, நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்புகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்க தவறிய மத்திய அரசை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட முக்கிய எதிர் கட்சிகள் மிக கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.