போருக்குத் தயாரானது சீனா! இந்தியா ஆலோசனை..
By Aruvi | Galatta | May 27, 2020, 11:15 am
ராணுவத்தைத் தயார் நிலையில் இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியா - சீனா எல்லையில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மோதல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இதனால், இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, இருநாடுகளும் தங்களது ராணுவத்தைக் குவிக்கத் தொடங்கி உள்ளன.
சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
ஆனால், எந்த மோசமான சூழ்நிலையையும் சமாளிக்க ராணுவத்தைத் தயார் நிலையில் இருக்குமாறு, சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் இறையாண்மையை உறுதியாகப் பாதுகாக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியா - சீனா எல்லையில் நிலவும் சூழல் குறித்து, முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து ராணுவ அமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், இந்தியா - சீனா எல்லையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.