“ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது” பீட்டா அமைப்பு மீண்டும் போர்க்கொடி..
By Aruvi | Galatta | Jan 08, 2021, 11:15 am
“ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனுமதியைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று, பீட்டா அமைப்பு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை, இந்த உலகம் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. அந்த மெரினா பற்ற வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம் என்னும் புரட்சித் தீ, தமிழ்நாட்டையும் தாண்டி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் எதிரொலித்தது. குறிப்பாக, ஒட்டு மொத்த உலக நாடுகளிலும் எதிரொலித்த நிலையில், ஐ.நா. சபையில் அந்த குரல் எதிரொலிக்கத் தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாகத் தான், தமிழகத்தில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாகக் காலம் காலமாகத்
திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான, இதற்கென்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பல கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்குத் தமிழக அரசு தற்போது அனுமதி அளித்து உள்ளது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கும், பங்கேற்பதற்கும் சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.
அதன் படி, மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பான பணிகளை மதுரை மாவட்டத்தில் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், “தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது” என்று, பீட்டா அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பீட்டாவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 50 மருத்துவர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பீட்டா அமைப்பின் இந்திய இணை ஆராய்ச்சியாளர் டாக்டர் அங்கிதா பாண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜல்லிக்கட்டு போட்டிகளை நிறுத்தாவிட்டால், கொரோனா காரணமாகவும் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும், “ஜல்லிக்கட்டு தேவையற்ற கூட்டங்களுக்கு வழிவகுக்கும் என்றும், ஜல்லிக்கட்டு ஒரு அத்தியாவசியமற்ற விளையாட்டு எனவும், கோவிட் 19 விரைவாகப் பரவுவதைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “மாடு பிடிப்பவர்கள் கோவிட் 19 டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் சான்றிதழ்கள் பெற்றிருந்தாலும், பார்வையாளர்களின் வெப்ப பரிசோதனை பரிசோதித்தல்
போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் ஜல்லிக்கட்டை அனுமதித்தாலும், இவையெல்லாம் வைரஸ் பரவுவதைத் தடுக்க போதுமானதாக இல்லை” என்றும், அந்த அறிக்கையில் பீட்டா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய பீட்டா நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்தும், இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் அப்படியே முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.