விசாலின் “சக்ரா” பட பாணியில் 15 நாட்களில் 26 கொள்ளைகள்! பீதியில் பொதுமக்கள்..
By Aruvi | Galatta | Feb 26, 2021, 04:16 pm
விசாலின் “சக்ரா” பட பாணியில், 15 நாட்களில் 26 கொள்ளை சம்பவங்கள் நடந்து உள்ளது, பொது மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் விசாலின் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் “சக்ரா” திரைப்படத்தில், ஒரு நாளில் 50 வீடுகளில் கொள்ளை அடிப்பது போல் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதே மாதிரியான சம்பவம், தற்போது நிஜத்தில் நடந்து உள்ளது தான், வேதனையின் உச்சமாக இருக்கிறது.
பெரம்பலூர் பகுதியில் தான், இப்படி ஒரு தொடர் கொள்ளைகள் அரங்கேறி இருக்கின்றன.
பெரம்பலூர் அடுத்து உள்ள ரஞ்சன்குடியில் கடந்த 15 நாட்களில் குறிப்பிட்ட 10 பகுதிகளில் கிட்டத்தட்ட 26 வீடுகள் மற்றும் கடைகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாகக் கொள்ளை சம்பவம்ஙகள் அரங்கேறி இருக்கின்றன.
அதாவது, கடந்த 10 ஆம் தேதி அன்று, அங்குள்ள வேப்பந்தட்டையில் 2 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இரு கடைகளின் உரிமையாளர்களும், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, கடந்த 15 ஆம் தேதி அங்குள்ள மங்களமேடு மற்றும் கிருஷ்ணபுரத்தில் தொடர்ச்சியாகக் கொள்ளையர்கள் தங்களது கை வரிசையைக் காட்டி கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 16 ஆம் தேதி மீண்டும் வேப்பந்தட்டையில் தொடர்ந்து 9 கடைகளிலும் துளியும் இறக்கம் இல்லாமல் வரிசையாகக் கொள்ளை அடித்துவிட்டு, தப்பிச் சென்றிருக்கிறார்கள் மர்ம நபர்கள்.
இதனையடுத்து, கடந்த 18 ஆம் தேதி அங்குள்ள அன்னமங்கலத்தில் 5 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு முயற்சியும், ஒரே ஒருரு வீட்டில் மட்டும் பணம் திருட்டும் நடந்திருக்கிறது. குறிப்பாக, அதே நாளில், அங்குள்ள பாலக்கரையில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணம் கொள்ளை போய் உள்ளது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட மக்கள், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அத்துடன், வரிசையாக 19, 20, 22, 23 என்று, அடுத்தடுத்த தேதிகளில் குறிப்பிட்ட அந்த 10 பகுதிகளில் மட்டும் வரிசையாகக் கொள்ளைகள் அரங்கேறி இருக்கின்றன.
முக்கியமாக, ரஞ்சன்குடி கிராமத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையின் அருகில் தனித்தனியாக இருக்கும் வீடுகளைக் குறிவைத்து, அந்த வீடுகளை நோட்டமிட்டு வந்த கொள்ளையர்கள், தொடர்ச்சியாக நள்ளிரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டின் உரிமையாளர்களைத் தாக்கிவிட்டு வீடு மற்றும் கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.
இப்படியாக, கடந்த 15 நாட்களில் பெரம்பலூர் சுற்றி உள்ள குறிப்பிட்ட 10 பகுதிகளில் மட்டும் கிட்டத்தட்ட 26 வீடுகள் மற்றும் கடைகளில் மர்ம நபர்கள், அடுத்தடுத்து தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துச் சென்று உள்ளனர்.
இதனால், பணம் மற்றும் நகைகளை பறிகொடுத்த பாதிக்கப்பட்ட மக்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் வரிசையாகப் புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாகத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து வரும் போலீசார், கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
அதே நேரத்தில், பெரம்பலூர் சுற்றுப்புறப் பகுதியில் அடுத்தடுத்து நடந்து வரும் தொடர்ச்சியான கொள்ளை சம்பவங்களால், அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உரைந்து உள்ளனர்.
மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, “ இப்பகுதியில் அடுத்த கொள்ளை சம்பங்கள் அரங்கேறும் முன்பாக, காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து, கொள்ளையர்களைக் கைது செய்ய வேண்டும்” என்றும், அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.