தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரங்கேறிய அட்டகாசங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில், அதே கிராமத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து, 4 மதுபாட்டில்களை வாங்கி ஆனந்தத்தில் பாட்டுப் பாடி அசத்தினார். அந்த பாடல் காட்சிகள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Open Tasmac Shop in Tamil Nadu

ஆரணியில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில், பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து மதுபாட்டில்களை வாங்க வரிசையில் நின்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் லத்தியைக் கொண்டு மிரட்டும் தோரணியில் கூட்டத்தை சரி செய்தனர். 

கோவை அருகே டாஸ்மாக் மதுபானக் கடை திறந்ததும், வரிசையில் காத்திருந்த குடிமகன்கள் கைதட்டி, விசிலடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்று வெயில் வாட்டி எடுத்ததால், முகக் கவசம் அணிந்து குடைகளுடன் வந்த மதுப்பிரியர்கள், தண்ணீர் பாட்டில்களுடன் அலுவலகத்திற்குச் செல்வதுபோல், ஒரு கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்.

Open Tasmac Shop in Tamil Nadu

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் டாஸ்மாக் மது கடை திறக்கப்பட்டதையடுத்து, வரிசையில் நின்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், கடை திறந்ததும் உற்சாக மிகுதியால் சிலம்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனை, அங்கு கூடியிருந்த அனைவரும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.

ராமநாதபுரம் அருகே பெண்கள் எதிர்ப்பு காரணமாக, திறக்கப்பட இருந்த டாஸ்மாக் மதுபானக் கடை மூடப்பட்டது. கடையைத் திறந்தால் அடித்து நொறுக்குவோம் என்று பெண்கள் அனைவரும் சேர்ந்து சூளுரைத்ததால், அதிகாரிகள் கடையைத் திறந்ததும் மூடினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Open Tasmac Shop in Tamil Nadu

கடலூரில் மதுக்கடைகள் திறந்ததால், புதுச்சேரியிலிருந்து பலரும் மதுவாங்க டாஸ்மாக் கடையில் குவிந்தனர். இதில், சில பெண்களும் நீண்ட நேரம் வரிசையில் 

காத்திருந்து, மது வாங்கிச் சென்றனர். மேலும், கடலூரில் உள்ள மற்றொரு மது கடையில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதும், சிலர் மது பிரியர்கள், கடையின் முன்பு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், போலீசார் தடியடி நடத்திச் சரி 
செய்தனர். பலரும் போலீசாரிடம் அடி வாங்கினாலும், அடம் பிடித்து மதுவை வாங்கிய பிறகே நகர்ந்து சென்றனர்.

காஞ்சிபுரத்தில், சுமார் 3 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருந்து பொதுமக்கள், நீண்ட நேரமாகக் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். அங்கு, தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், குடிமகன்கள் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டு இருந்தன. இதனால், நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருந்த மது 

பிரியர்கள் கடைக்குச் சற்று முன்பாக போடப்பட்டிருந்த இருக்கையில் சிறிது நேரம் வருசையில் காத்திருந்து, அதன்பிறகு மது வாங்கிச் சென்றனர்.

Open Tasmac Shop in Tamil Nadu

அரக்கோணம் அடுத்த கும்பிபேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் வெறும் பீர் பாட்டில்கள் மட்டுமே இருக்கும் தகவல் முன் கூட்டியே தெரிந்து, பெரும்பாலும் குடிமகன்கள் அங்கு வரவில்லை. இதனால், கடை முன்பாக வெறிச்சோடி காணப்பட்டது. யாருமே இல்லாத அந்த கடையில், போலீசார் மட்டுமே பாதுகாப்புப் பணியிலிருந்தனர்.

கோவில்பட்டி பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதற்கு, பணப்புழக்கம் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் உள்ள ஒரு மதுக்கடைக்கு வந்த 55 வயது முதியவர் ஒருவர், முகக்கவசம் இல்லாததால் தென்னை ஓலையை முகத்தில் அணிந்து வந்து, மது வாங்கிச் சென்றார். இதனைப் பலரும் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

உசிலம்பட்டியில், மதுபானம் வாங்க வந்த மதுப்பிரியர்கள், திருவிழா கூட்டம் போல் குவிந்திருந்தனர். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சேலம் அருகே உள்ள சில கடைகளில் சுட்டெரித்த வெயிலைப் பொருட்படுத்தாமல் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பொறுமையாக வரிசையில் காத்திருந்த குடிமகன்கள், மது வாங்கிச் சென்றனர். 

திருப்பூர் கல்லூரி சாலையில் மது போதையில் இளைஞர் ஒருவர், சாலையில் சென்றவர்களை திடீரென தாக்கித்தொடங்கினார். இதனை அடுத்து, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் சேர்ந்து, அந்த போதை இளைஞருக்குத் தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து, விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் இளைஞரை மீட்டு, விசாரணை நடத்தினர்.

இதனிடையே, மக்களைக் காக்கவேண்டிய அரசே, டாஸ்மாக் கடையைத் திறந்துவிட்டு ஆபத்தான சூழலுக்கு மக்களைத் தள்ளிவிட்டதாகக் குற்றம்சாட்டிய திமுக உள்ளிட்ட கூட்டணி எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர், தங்களது வீட்டின் முன்பு கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், “மக்களைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டவேண்டிய அரசு மதுக்கடைகளைத் திறப்பது அதிர்ச்சியளிப்பதாக, திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டினார். 

அதேபோல், “டாஸ்மாக் கடைகளைத் திறப்பதன் அவசியம் என்ன?” என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி கேள்வி எழுப்பினார்.