“பள்ளிக்கூடம் போகாமலே...” - ஆசிரியர் மார்கிரேட் SPECIAL ARTICLE
By Aruvi | Galatta | Jul 30, 2020, 11:19 am
இதயத்தால் இணைந்திருக்கும் வகுப்பறை முதல் இணையத்தால் இணைந்திருக்கும் வகுப்பறை வரை அலசி ஆராய்கிறார் ஆசிரியர் மார்கிரெட்.
“கொரோனா வந்ததும் வந்துச்சு, பலருக்கு திண்டாட்டம், இன்னும் பலருக்கு கொண்டாட்டம். முதல் கொண்டாட்டம் 10th, 11th மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து. படிக்க வேண்டாமென்று நினைச்சிட்டு, மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தீட்டு, நல்லா சாப்ட்டு, நினைச்ச நேரம் தூங்கி, வீட்டிலிருந்தபடியே தாயம் உள்ளிட்ட விளையாட்டுகளை பெண்கள் விளையாடுவது ஒரு பக்கமும், பசங்க pubg உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவது இன்னொரு பக்கமும் குஷியா போய்ட்டு இருந்த இந்த குழந்தைகளோடு வாழ்க்கைல ஆன்லைன் வகுப்பு என்கிற ஒரு குண்டு வந்து இப்ப விழுந்திச்சு” என்று ஜாலியாக பேசத் தொடங்குகிறார் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா, வாட்டாத்திக்கோட்டை அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மார்கிரேட்.
“கேம்ஸ் வகுப்பு முடிச்சுட்டு வகுப்பறையில் வந்த உட்காரதே பசங்களுக்குக் கொஞ்சம் கஷ்டமான விஷயம். இதுல வீட்லேயே உட்காராந்திட்டு 'பாடத்த கவனினு' சொன்னா, கேப்பாங்களா???” என்று, நம்மிடமே கேள்வியைக் கேட்கிறார்.
“45 நிமிடம் வகுப்புல, பசங்கள எங்க கைக்குள்ள வச்சுக்க எல்லா ஆசிரியர்களுடைய முதல் ஆயுதமும் eye contact தான். பாடத்தவிட்டு பசங்க யாராவது கனவுக்குள்ள அல்லது வேற ஒரு உலகத்துக்குள்ள போனா, அவங்க பேர சும்மா சொன்னா போதும். அந்த பையனுக்கு நினைவு திரும்பீரும். ஆன்லைனில் வகுப்பு எடுத்தா, screen shot எடுத்து நினைவுகளை சேமிக்கிறாங்க இந்த பசங்க.
ஒரு வகுப்பறைக்குள் பாடம் எடுக்கும் போது, ஆயிரம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினாலும்; ஆசிரியரும் மாணவரும் இதயத்தால் இணைந்திருப்போம். இணையவழிக் கல்வியில் அது இயலவில்லை. வகுப்பறைக்குள் மாணவர் செய்யும் குறும்புகள் எல்லாம் மன்னிப்புக் கேட்டதும் அவர்களோடு முடிந்துவிடும். இணையத்தில் அவன் விளையாட்டாய் செய்யும் குறும்பு கூட.. 'அட நாமும் செய்து பார்த்தால் என்ன?' என்று, மற்ற மாணவர்களையும் செய்யத் தூண்டி விடும்.
வருகையைப் பதிவு செய்து விட்டு, வாட்ஸ்ஆப்பில் கதைத்துக் கொண்டிருக்கும் மாணவர்களையும் நாம் காண முடிகிறது. கதைகளை எல்லாம் கதை கதையாய் சொல்லி இணையத்தில் நடத்தி விடலாம். கணிதத்தைப் பற்றி யாரேனும் யோசித்தீர்களா?
பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்குத் தகுந்தார் போல் பாடி, ஆடி, ஓடி, நடித்து இன்னும் பிற வித்தைகள் சொல்லி பாடம் நடத்துகிறோம். அது, என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு ஒரு நிம்மதியான மன திருப்தியைத் தருகிறது. பெரும்பாலும், மாணவர்களிடம் அன்பாவும், கருணையாகவும் நடந்துகொள்ளும் நாங்கள் சில நேரங்களில் மாணவர்களிடம் கடிந்துகொள்ளவும் நேரிடுகிறது. அதுவும், தவறை திருத்தும் தருணத்தில் மட்டுமே.
பல பள்ளி மாணவர்களின் குடும்ப பிரச்சனையைத் தெரிந்தும் கூட, பெற்றோரை அழைத்துப் படிக்கும் குழந்தைகளுக்களுக்காக சமாதானம் செய்யும் வேலைகளையும் என்னைப் போன்ற ஆசிரியர்கள் சிலர் செய்கிறார்கள். அது, வெற்றி தரும்போது, படிக்கும் மழலையின் முகத்தில் தோன்றும் அதிசய சிரிப்பே, என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு பேரானந்தத்தைத் தருகிறது.
ஆனால், 'எல்லா மாணவர்களுக்கும் புரிந்து விட்டது' என்ற மன திருப்தியை இணைய வழிக் கல்வி கொடுப்பதில்லை. Students teacher interaction என்கிற முறையில் கேள்வி பதில்களிலும், கலந்துரையாடுவது மூலமும் ஒரு பாடத்தின் வாயிலாகக் கற்பிக்கப் படும் வாழ்க்கைக் கல்வியை முழுமையாக எல்லா மாணவர்களுக்கும் கற்பிக்க முடியவில்லையே?!
காரணம், network problem மாம். கிராமப் புறங்களில் டவர் பிரச்சனை. ஏழை எளிய குழந்தைகளிடம் போன் வைத்திருக்கும் அளவுக்கு வசதி இல்லை. 'கடைசியில இந்த கொண்டைய மறந்துட்டோமேங்கிற கதை தான்' இது” என்று, நகைச்சுவையாக ஆன்லைன் வகுப்பில் உள்ள சிக்கல்களை குறிப்பிடுகிறார்.
“ஆயிரம் தான் ஆன்லைனில் வகுப்பு நடத்தினாலும், என் மாணவர்கள் எல்லாம் லைனில் தான் உள்ளார்களா என்று ஐயமே இறுதியில் மிஞ்சி நிற்கிறது.”
“வகுப்பறை என்பது கருவறை போல, தாயும் - சேயும் எப்படியோ, அப்படித் தான் ஆசிரியரும் - மாணவர்களும். தான் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைக்குக் காட்டும் அக்கறையை விட, பல மடங்கு அக்கறையை வகுப்பறையில் இருக்கும் குழந்தைக்குக் காட்டுகிறோம். அக்கறை மட்டும் அல்ல கோவம், கண்டிப்பு, மிரட்டல், அதட்டல், கிண்டல், கொஞ்சல், என சில சமயம் அதிகமாகிப் போகும் உரிமையாகக் கூட மாறும். காரணம், ஒரு குழந்தையை நல்ல மனிதனாகச் செதுக்கும் பெரும் பங்கு ஆசிரியர்களுடையது என்பதால் தான், இவ்வளவும். சொல்லப்போனால், வகுப்பறையில் நான் பெரும்பாலும் நடித்துக் காட்டி நடித்துக் காட்டி பாடம் நடத்துவதால், 'நான் நடிகையோ?!' என்ற எண்ணம் கூட எனக்கு வந்ததுண்டு.
வகுப்பறையில் தாயும் சேயுமாய் புத்தகத்தில் உள்ள பாடத்தைத் தாண்டி பல வாழ்க்கைப் பாடங்கள் சொல்லிக் கொடுப்போம். ஆனால், ஆன்லைன் வகுப்புகளில் அது இயலவில்லையே, என்ற ஆற்றாமை எங்களுக்குள் இருக்கிறது.
பாடப்புத்தகங்களில் உள்ளதை மட்டும் நடத்தி நடத்தி இணைய வகுப்புகள் எல்லாம்; ஆசிரியரையும் மாணவர்களையும் இணைக்கவே இல்லை என்பது தான் உண்மை. பாடங்களை நடத்தும் போது அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களைப் பேச வைக்க எடுக்கும் ஆகச்சிறந்த முயற்சி கலந்துரையாடல். மாணவர்களின் ஐயத்தைப் போக்கும் பொருட்டு, மாணவர்களின் சிந்தனைகளை வெளிக்கொண்டு வந்து ஊக்கப் படுத்தி, அவர்களைச் சிந்திக்க வைக்கும் பொருட்டு கலந்துரையாடலை நாங்கள் நடத்துவோம். ஆனால், இதை இணைய வழி வகுப்புகளில் செய்ய வாய்ப்பே இல்லை. முயன்றாலும், தோல்வி தான்.
கண்ணைப் பார்த்து மாணவர்களின் மனதைப் புரிந்து, தனியே அழைத்து தோளில் கை போட்டு.. 'என்னடாமா' என்று கேட்டு, 'என்னால் முடியாது' என்று சொல்லும் மாணவர்களைக்கூட 'முடியும்' என்று சொல்ல வைக்க, வகுப்பறையில் நாங்கள் செய்யும் முயற்சி; இணைய வழிக் கல்வியில் எங்களால் செய்ய முடியாமல் போகும் இயலாமையைக் காட்டுகிறது சார்” என்கிறார் பாவமாக.
“பள்ளியில், ஒரு மணி நேரம் வகுப்பு, 'அதற்குள்ளாக முடிந்து விட்டதா?' என்று, மாணவர்களை வகுப்பறையில் சொல்ல வைத்தது. ஆனால், 'இணைய வழிக் கல்வியில் எப்படா முடியும்?' என்று, சொல்ல வைக்கிறது.
கரும்பலகையும் சுண்ணக்கட்டியும் கொண்டு நடத்தும் பாடத்தைத் தொடர்ந்து பார்த்தாலும் வராத சலிப்பு, பத்தாயிரம் கொடுத்து வாங்கும் கைப்பேசியில் நடந்தும் ஒரு மணி நேர வகுப்பில் வந்துவிடுகிறது.
நினைத்த நேரத்தில் இடைவேளை
நினைத்த நேரத்தில் உணவு
நினைத்த நேரத்தில் தின்பண்டம்
அவர் அவர் நினைத்த நேரத்தில்
அவர் அவர் நினைப்பது போல் நடந்துகொள்ளலாம்
என்ற ஒரு கட்டுப்பாடு இல்லாத ஒரு வாழ்க்கை முறையை
மாணவர்கள் பழகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை!” என்று பளீச் பளீச் என்று பேசுகிறார்.
பள்ளியில் தன் நட்புகளுடன் பட்டாம்பூச்சிகளாய் பறந்த சிறகடித்த மாணவர்கள் எல்லாம், நான்கு சுவர்களுக்குள் சுருங்கி விட்டார்கள்.
இருக்கும் குழந்தைகள் இணையத்தால் இணைகிறார்கள்…
இல்லாத குழந்தைகள் இதயத்தில் தவிக்கிறார்கள்…”
என்று, ஏழை மாணவர்களின் நிலையில் நின்று உரக்கப் பேசுகிறார்.
அத்துடன், “இணைய வழி முறையில், கண்டதைப் பார்த்துக் கெட்டு விடுவார்களோ என்று கடும் பயம் கொண்ட பெற்றோர்களுக்கு parental control app தொழிற்நுட்பம் பெற்றோர்களுக்குக் கிடைத்த ஒரு வரமே.
அதேபோல், Blue whale லால் நிகழ்ந்த கொடூரத்தை நினைத்தால் இன்றளவும் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளிடம் கைப்பேசியைக் கொடுக்க கைகள் நடுங்குகிறது. அத்தகைய பெற்றோர்களுக்கு parental control app தொழிநுட்பம் பெற்றோர்களுக்குக் கிடைத்த ஒரு வரமாகவே நான் பார்க்கிறேன். வீட்டிலிருந்து மாணவர்கள் இணைய வழியில் கற்பதால், பெற்றோர்கள் தான் மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும். பெற்றோர்களே மாணவர்களுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்” என்றும், ஒரு தாயைப் போல் அக்கறையோடு பேசுகிறார் ஆசிரியர் மார்கிரேட்.
அதே நேரத்தில், “தமிழக அரசு தற்போது கொண்டுவர இருக்கும் டி.வி.யில் பாடம் நடத்தும் முறை மாணவர் மத்தியில் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும். அதற்குக் காரணம், தற்போது புதிதாக வந்துள்ள பாடப் புத்தகங்களில் 'க்யூ ஆர் கோடு' முறையில் பாடங்கள் இடம் பெற்றுள்ளதால், நாங்கள் வகுப்பறையில் கூட டி.வி. மூலமாகவும், கம்பியூட்டர் மூலமாகவும் வாரம் ஓரிரு முறை மாணவர்களுக்குப் பாடம் நடத்திப் பழக்கி இருக்கிறோம். அப்போது, டி.வி.யில் பாடத்தை கவனிக்கும் மாணவர்கள் கவனம் என்பது, சினிமா பார்க்கும் அளவுக்கு மாணவர்கள் உன்னிப்பாகப் பார்த்துப் பயின்றதை நாங்களே கண் கூடாக பார்த்திருக்கிறோம்.
அதனால், ஆன்லைன் வகுப்பை விட, தமிழக அரசு தற்போது எடுத்திருக்கும் டி.வி.யில் பாடம் நடத்தும் முறை நிச்சயம் வெற்றி பெறும். கொரோனா காலத்திற்குத் தகுந்தார்போல், ஆசிரியர்களும் மாற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை, இந்த கொரோனா காலம் நெற்றிப் பொட்டில் அடித்தார் போல், நன்றாகவே புரிய வைத்துள்ளது” என்று ஆசிரியர் மார்கிரேட் நெக்குருகி மிக அழகாகவே பேசுகிறார்.
இன்றைய தினம் நண்பர்கள் தினம். பெற்றோர்களும், குழந்தைகளிடம் நண்பர்களாகப் பழகி வேண்டியது, இந்த கோரோனா சமயத்தில் அவசியமான ஒன்றே. மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய காலம் இது. அதைத் தான் இந்த தருணங்கள் உணர்த்துகிறது என்பதே பேருண்மை.