உடுமலை சங்கர் கொலை- மேல்முறையீட்டு வழக்கில் பதில் தர கவுசல்யா தந்தைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
By Madhalai Aron | Galatta | Sep 07, 2020, 04:22 pm
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது. அதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.
மாநிலத்தையே உலுக்கிய இந்தக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை வழக்கில் இருந்து விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. மேலும் மணிகண்டன், செல்வகுமார், தமிழ்வாணன், ஜெகதீசன் மற்றும் மதன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சங்கரின் சகோதரர் விக்னேஷ்வரன், கவுசல்யா தரப்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டனர். மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட சங்கரின் குடும்பத்தினர், தமிழக அரசு, கவுசல்யா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, வழக்கு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மெலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது பதிலளிக்க கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தது.
விரைவில் சின்னசாமி பதிலளித்து, வழக்கு அடுத்தக்கட்ட விசாரணைக்கு செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.