இந்திய அரசை ஐ.நா.வில் வசமாக மாட்டிவிட்ட நித்தியானந்தா!
By Arul Valan Arasu | Galatta | 04:42 PM
தமிழ்நாடு அரசும் - இந்திய அரசும் தனக்கு எதிராகச் செயல்படுவதாக ஐநா மனித உரிமை ஆணையத்தில் நித்தியானந்தா புகார் அளித்துள்ளார்.
பெண்கள் கடத்த வழக்கில் நித்தியானந்தாவைக் குஜராத் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதுடன், அவரை கைது செய்து சர்வதேச போலீசாரின் உதவியைக் குஜராத் போலீசார் நாட இருப்பதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.
இந்நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எல்லாமே தனக்கு எதிராகச் செயல்படுவதாக நித்தியானந்தா ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக நித்தியானந்தா சுமார் 46 பக்கங்கள் கொண்ட கடிதத்தை ஐநா மனித உரிமை ஆணையத்தில் அவர் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன், தானும் தன்னுடைய ஆசிரம சீடர்களும் பல்வேறு தருணங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாகவும் புகைப்பட ஆதாரங்களுடன், அந்த கடிதத்தில் நித்தியானந்தா குறிப்பிட்டு இணைத்துள்ளார்.
மேலும், பாஜகவினர் தங்களைத் தாக்குவதாகவும், இந்தியாவில் உள்ள RSS உள்ளிட்ட பிற இந்து அமைப்புகள், தன்னை அச்சுறுத்துவதாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள ஆளும்கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தன்னை உளவியல் ரீதியாக மிரட்டுவதாகவும், மனதைப் புண்படுத்துவதாகவும் அந்த கடிதத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
முக்கியமாக, தங்களது ஆசிரமத்தில் உள்ள பெண் சீடர்களை வேண்டும் என்றே கைது செய்து, அவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவதாகவும் நித்தியானந்தா குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை தன் மீது சுமார் 150 வழக்குள் பதிவு செய்யப்படுவதாகவும், இதற்கு ஐ.நா. தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்றும் நித்தியானந்தா அந்த கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, இந்திய அரசையும், தமிழக அரசையும் நித்தியானந்தா குற்றம்சாட்டி ஐ.நா.வுக்கு அளித்துள்ள கடிதத்தின் நகல், இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.