நித்தியானந்தா சிறுமிகளைக் கடத்தியதாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா, தனது 4 பெண் குழந்தைகளை அங்குள்ள நித்தியானந்தா கல்வி குழுமத்தில் சேர்த்துப் படிக்க வைத்துள்ளார். ஆனால், அடுத்த சில மாதங்களில், அந்த 4 பெண் குழந்தைகளையும் பெற்றோரின் அனுமதியில்லாமல், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டு, அங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்து, பெற்றோர் நேரில் சென்றுள்ளனர். ஆனால், அவரது குழந்தைகளைப் பார்க்க, அந்த பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆசிரம ஆட்களிடம் போராடி தனது 2 குழந்தைகளை முதலில் மீட்டுள்ளார். மீதமுள்ள 2 குழந்தைகளை அவரால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து, அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

Nithyananda

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நேரில் சென்று அடைத்து வைக்கப்பட்ட 2 பெண் குழந்தைகளை மீட்டனர். அத்துடன், நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள 2 முக்கிய பெண் சீடர்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, இந்த வழக்கைப்பற்றியெல்லாம் கவலைப்படாத நித்தியானந்தா, வழக்கம்போல் தனது பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். 

Nithyananda

இது குறித்து குஜராத் போலீஸ் உயர் அதிகாரி ஆர்.வி.அசாரி கூறும்போது, “நித்தியானந்தா இங்கு இல்லை என்றும், அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார்” என்றும் தெரிவித்தனர். மேலும், “அவர் எப்போது இந்தியா வந்தாலும் கைது செய்யப்படுவார்” என்றும், “இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட யாரையும் தப்ப விட மாட்டோம்” என்றும் விளக்கம் அளித்தார். குறிப்பாக, “தேவைப்பட்டால் வெளிநாட்டில் உள்ள நித்தியானந்தாவை அங்கேயே கைது செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். இதனால், நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டாரா என்று பல்வேறு தரப்பினரும் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.