தமிழகத்தில் புதிய தளர்வுகளா..? மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்ட ஆலோசனைகள் என்னென்ன..?
By Aruvi | Galatta | Nov 28, 2020, 03:49 pm
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்ட ஆலோசனைக்குப் பிறகு, அடுத்த மாதம் மேலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று இந்த ஆண்டு தொடக்கம் முதலே வேகமாகப் பரவி வருகிறது.
தமிழகத்தை பொறுத்த வரை, கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது.
அத்துடன், பொது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியற்றை கணக்கில் கொண்டு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவானது படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வந்தது. எனினும், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தற்போது தமிழகத்தில், குறையத் தொடங்கி உள்ளது.
மேலும், தமிழகத்தை பொறுத்த வரை தற்போது பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், இன்னும் ஒரு சில கட்டுப்பாடுகள் ஊரடங்கில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. அதன் படி, தமிழகத்தில் இன்னும் பள்ளி - கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன.
அத்துடன், சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட பொழுது போக்கு பூங்காக்களும் முழுமையாகத் திறக்கப்படாமல் ஒரு சில தடை உத்தரவுகள் இன்னும் தொடரவே செய்கின்றன.
முக்கியமாக, தமிழகத்தில் சுமார் 100 பேர்களுக்கு மேல் கூடுதல் மற்றும் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி உள்ளிட்ட பல விசயங்களுக்கு முற்றிலும் விதிக்கப்பட்ட தடை உத்தரவு, தற்போது வரை தொடரவே செய்கின்றன.
அதே நேரத்தில், கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால், அடுத்த மாதம் மேலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்க
வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக, அடுத்த கட்ட முடிவுகளை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி மாவட்ட ஆட்சியாளர்களிடம் இன்று காலையில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, “அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது” என்று, குறிப்பிட்டார். “உடல் உறுப்பு தானத்தில் 6 வது முறையாக தமிழகம் முதன்மை இடத்தில் இருப்பதாக” பெருமிதம் தெரிவித்தார்.
“அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது என்றும், அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ள இந்த நிலையில், விருது பெற பாடுபட்டவர்களுக்கு நன்றி” என்றும், முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
மேலும், “ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழ் நாட்டை முதலிடத்திற்குக் கொண்டு வந்தவர்களுக்குப் பாராட்டுக்கள்” என்று குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி,
உயரதிகாரிகளின் சிறப்பான செயல்பாடே தமிழகம் முதலிடத்திற்கான விருதைப் பெற காரணம்” என்றும், புகழாரம் சூட்டினார்.
அத்துடன், “கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்குப் பாராட்டுகள் என்றும், கொரோனா தடுப்பு குறித்து 12 முறை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் இது வரை நடந்தது என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர், மக்களின் பாதுகாப்பு கருதியே ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது” என்றும், சுட்டிக்காட்டினார்.
முக்கியமாக, “நிவர் புயலின்போது சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு நன்றி” தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, தாழ்வான பகுதிகளில் நீர் தேங்காமல் இருக்க அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்கும்” என்றும், உறுதி அளித்தார்.
குறிப்பாக, “தமிழகத்தில் இது வரை 7,525 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது என்றும், மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரைகளைத் தமிழக அரசு தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகிறது என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியதால் தமிழகத்தில் இறப்பு சதவீதம் முற்றிலும் குறைந்து உள்ளது” என்றும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
இதனால், அடுத்த மாதம் முதல் மேலும் பல ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அகமதாபாத்தில் உள்ள சைடஸ் பையோடெக் நிறுவனத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அந்த நிறுவனத்தில் உருவாக்கப்படும் ZYCOV-D கொரோனா தடுப்பூசி நிலை குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.