நீதிமன்றக் காவலில் நெல்லை கண்ணன்!
By Arul Valan Arasu | Galatta | 04:20 PM
நெல்லை கண்ணனுக்கு 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிக முக்கியமான இலக்கியவாதியாகவும், மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்து வருபவர் நெல்லை கண்ணன்.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன், குடியுரிமை சட்டத்தைத் திருத்தம் செய்தமைக்காக பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். மேலும், தமிழக ஆளுநரிடமும் பாஜகவினர் புகார் அளித்தனர்.
குறிப்பாக, நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி, சென்னை மெரினாவில் தடையை மீறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே, நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நெல்லை கண்ணனை வரும் 13 ஆம் தேதி வரை, நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.