“என் தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர்!” ஓபிஎஸ் ஐஸ் மழை..
“வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும் என்றும், எனது தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர்” என்று, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சட்டப் பேரவையில் ஐஸ் மழை பொழிந்து உள்ளார்.
“தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்படும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு திமுக வினர் உள்பட பலரும் பாராட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
அப்போது, அதிமுக வின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இதற்கு வரவேற்பு தெரிவித்து பேசினார்.
இது தொடர்பாக சட்டப் பேரவையில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், “கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பதை அதிமுக சார்பில் மனதார வரவேற்கிறோம்” என்று, குறிப்பிட்டார்.
“என்னுடைய தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர் என்றும், அவருடைய பெட்டியில் பராசக்தி, மனோகராவுடைய வசனம் இருக்கும்” என்றும், அவர் சுட்டி காட்டி பேசினார்.
“என் தந்தை இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்து அதை படித்துள்ளோம் என்றும், என்னுடைய நண்பர்களிடத்திலும் இது பற்றி நான் சொல்லிக்கொண்டிருப்பேன் என்று குறிப்பிட்ட” ஓ. பன்னீர்செல்வம், “கருணாநிதியின் வசனத்தில் அனல் பறக்கும் என்றும், பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது துணை நின்றுள்ளது” என்றும், மேற்கொள்காட்டி பேசினார்.
அத்தடன், “50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி என்றும், பல்வேறு சிறப்பு மிக்க சட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி” என்றும், ஓ. பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.
“கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம்” என்று பேசிய அவர், “கலைஞர் பற்றிய அனைத்து சிறப்பு அம்சங்களும் நினைவிடத்தில் இடம் பெற வேண்டும்” என்றும், ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.
குறிப்பாக, “வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்” என்றும், ஓ. பன்னீர்செல்வம் புகழாராம் சூட்டினார்.
முன்னதாக, சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் தரமற்று இருப்பதாக எழுந்த புகாரில் 2 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர் கலக்கத்தில் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், “முன்னாள் துணை முதலமைச்சரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், கட்டட ஒப்பந்தக்காரர் உள்ளிட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், வலியுறுத்தப்பட்டதால், ஓ. பன்னீர்செல்வத்திற்கு பெரும் சிக்கல் எழுந்தது குறிப்பிடத்தக்கது.