குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தடையை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் பேரணியை இஸ்லாமிய அமைப்பனர், கையில் தேசிய கொடியை ஏந்தியபடி தொடங்கி உள்ளனர். 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பல கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Muslim outfits protest march to TN Secretariat for CAA

அதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் இன்று தொடர்ந்து 6 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்பினர் அறிவித்திருந்தனர். ஆனால், இதற்குத் தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

Muslim outfits protest march to TN Secretariat for CAA

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் அறிவித்துள்ள சட்டவிரோத முற்றுகை போராட்டத்திற்கு, இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், தடையை மீறி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் பேரணியை இஸ்லாமியர்கள் தற்போது தொடங்கி உள்ளனர். பேரணியில் ஈடுபடுபவர்கள், கையில் தேசியக் கொடியை ஏந்தியபடியே, ஒருமைப்பாட்டை வலியுறுத்தி பேரணியில் பங்கேற்று வருகின்றனர்.

Muslim outfits protest march to TN Secretariat for CAA

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் தடையை மீறி இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டதால், அண்ணா சாலையிலிருந்து வாலாஜா வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், நேப்பியார் பாலம் வழியாகத் தலைமைச் செயலகம் வழியே செல்லக் கூடிய பேருந்துகள் அனைத்தும், சிவானந்தா சாலையில் மாற்றி அனுப்பப்படுகின்றன.

Muslim outfits protest march to TN Secretariat for CAA

மேலும், இஸ்லாமிய அமைப்புகள் தடையை மீறி  பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளதால், சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் மட்டும் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், தலைமைச் செயலகம் அருகே சுமார் 2 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Muslim outfits protest march to TN Secretariat for CAA

இதனால், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னை மட்டுமல்லாமல், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதுரை, நெல்லை உள்படத் தமிழகத்தின் முக்கிய பகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Muslim outfits protest march to TN Secretariat for CAA

அதேபோல், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் காரணமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, தலைமைச் செயலகத்தை நோக்கிய மிகப் பெரிய பிரமாண்ட பேரணி நடைபெற்று வருவதால், தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.