வழக்கமான விரைவு ரயில்கள் எப்போது இயக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் மதுரை எம்.பியுமான சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவத் தொடங்கியதை அடுத்துக் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி நாடு முழுவதும்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் போக்குவரத்துகள்  முடங்கின. பேருந்துகள், ரயில்கள், விமானச் சேவைகளும் முற்றிலுமாக மூடப்பட்டன.

பின்னர் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை அழைத்து வருவதற்காகச் சிறப்பு விமானங்கள் இயங்கின. அதேபோல் இந்தியாவின் பிற மாநிலங்களில் சிக்கிக் கொண்டவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதற்காகச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இருந்தாலும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் கடுமையாக இருந்ததால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்த தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்ற கொடுமையையும் நாம் பார்த்தோம்.


பின்னர் கடந்த மே 12 ஆம் தேதியிலிருந்து தலைநகர் டெல்லியிருந்து சென்னை, பெங்களூரு, அகமதாபாத், பாட்னா உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்குச் சிறப்பு ரயிகள் இயக்கப்பட்டன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும் நாள்தோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 
தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் கூடுதலாக செப்டம்பவர் 7 ஆம் தேதியிலிருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ரயில் சேவையைப் பயன்படுத்து வருகின்றனர். இன்னும் கொரோனாவிற்கு முன்பு இருந்ததுபோல் ரயில் சேவை துவக்கவில்லை.


இந்நிலையில் வழக்கமான விரைவு ரயில்கள் எப்போது இயக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் மதுரை எம்பியுமான சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.


இதற்குப் பதில் அளித்த ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், 'கொரோனா தொற்று காரணமாக மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று மார்ச் 23 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது' என கூறினார்.

- லெனின்