கொரோனா பரவல்.. மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
By Aruvi | Galatta | 03:10 PM
ஊரடங்கை அமல்படுத்துவதில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த காணொலி காட்சி ஆலோசனையின்போது, தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் மோடி கேட்டுத் தெரிந்துகொண்டார். அதேபோல், மேலும் சில மாநில முதலமைச்சர்களிடமும், அந்தந்த மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி நிலைமையைக் கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா வைரசால் இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் குறித்தும், இது தொடர்பாக பெர்துமக்களிடையே இன்னும் கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களுக்கு மருத்துவ வசதிகளை இன்னும் அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, மாநில முதலமைச்சர்களுக்குப் பிரதமர் மோடி சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அதன்படி, “ஏப்ரல் 15 ஆம் தேதி ஊரடங்குக்காலம் முடிந்ததும் மக்கள், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும்போது, நிலையான மற்றும் தடுமாற்றமில்லாத குறைந்தபட்ச கொள்கையை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், “அடுத்து வரக்கூடிய நாட்களில், கொரோனாவுக்கான சோதனை, கொரோனா பாதித்தவருடன் தொடர்பிலிருந்தவர்கள், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
“கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்கள் விநியோகத்தைப் பராமரிப்பது மிகவும் அவசியம்” என்றும் மோடி வலியுறுத்தி உள்ளார்.
“தயார் நிலையில் மருத்துவமனைகள், கூடுதல் மருத்துவ வசதிகள் இருப்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆயுஷ் மருத்துவர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இதனிடையே, “N95 மாஸ்க், வெண்டிலேட்டர்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்” என்று பிரதமர் மோடியிடம், காணொலி காட்சி மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை வைத்தார்.