மு.க.ஸ்டாலின் என்னும் ஆளுமை முதலமைச்சரானது இப்படிதான்!
By Aruvi | Galatta | May 07, 2021, 02:00 pm
மு.க.ஸ்டாலின் என்னும் தனிப்பெரும் ஆளுமை முதலமைச்சரான கதைகளைப் பற்றி தற்போது பார்க்கலாம்..
மு.க. ஸ்டாலின் என்னும், தனிப் பெரும் ஆளுமைக்குக் கிடைத்த வெற்றியாகவே 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் பார்க்கப்படுகிறது. அதன் படி, இன்றைத் தினம் முதல் முறையாக தமிழ்நாட்டு முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அரியணையில் தற்போது ஏறியிருக்கிறது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று முதலமைச்சராக அரியணை ஏறுவதற்கு முன்பாக, அவர் இந்த முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதற்கான அவரது வெற்றிப் பயணம் எங்குத் தொடங்கியது என்றால்..,
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கு மிக அருகில் வந்து நின்றது திமுக. அதற்கு மிக முக்கிய காரணம், அந்த கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின் என்கிற ஐகான் தான். காரணம், அப்போதைய தேர்தலில், கலைஞர் கருணாநிதி உடல்நிலை காரணமாக, தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.
அந்த நேரத்தில், கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் யாவும், புதிய கூட்டணி அமைத்தது. அதுவும், விஜயகாந்த் தலைமையில் உருவான மக்கள் நலக் கூட்டணி.
இதனால், ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமையை, அதிமுக என்னும் மிகப் பெரிய சாம்ராச்சியத்தை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஸ்டாலினுக்கு உருவானது. எனினும், “நமக்கு நாமே” என்று ஒரு திட்டத்தைக் கையில் எடுத்த ஸ்டாலின், தனி ஆளாகத் தமிழ்நாடு எங்கும் சுற்றிச் சுழன்று வந்தார். ஆனாலும், அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது.
இந்திய அளவில் பாஜக அசுர பலத்தோடு கடந்த 10 ஆண்டுகளாகத் திகழ்ந்துகொண்டு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. குறிப்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல். அந்தத் தேர்தலில் இந்திய அளவில் மிகப் பெரிய பெரும்பான்மை பலத்தோடு நாடாளுமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்தது பாஜக.
ஆனால், தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடைந்தது. அப்போது, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியையும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று, ஆளும் கட்சியாக இருந்த அதிமுக விற்கு சிம்ம சொற்பனமாகத் திகழ்ந்தது. இதனால், பாஜக திமுகவை திரும்பிப் பார்த்தது.
திமுகவின் இந்த மாபெரும் வெற்றியின் மூலமாக, 38 தொகுதிகளைப் பிடித்து மக்களவையின் இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக கம்பிரமாக அமர்ந்தது.
அதே நேரத்தில், தங்களால் கால் பதிக்க முடியாத மாநிலங்களில் பாஜக ஆடும் ஆடு புள்ளி ஆட்டத்தைத் தேசமே அரிந்து வைத்திருந்தது. பாஜகவின் இப்படியான ஆடு புள்ளி ஆட்டத்தை, அந்த சதுரங்க அரசியல் ஆட்டத்தை மற்ற கட்சிகள் எதிர்கொள்வது என்பது, அவ்வளவு சாதாரண விசயம் அல்ல. ஆனாலும், அந்த அரசியல் சதுரங்க விளையாட்டைக் கூட மிக நேர்த்தியாகக் கையாண்டு செயல் தலைவராகவும், கட்சியின் தளபதியாகவும் தன்னை நிறுப்பிது காட்டியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதே போல், 2014 நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு தொகுதியைக் கூட வெற்றி பெற முடியாமல் இருந்த திமுக, அடுத்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் மிகப் பெரிய 2 வது பெரிய கட்சியாக அமர வைத்த பெருமை, அந்த கட்சியின் ஐகான் மு.க.ஸ்டாலினையே சேர்ந்த பெருமை அது.
மிக முக்கியமாக, பாஜக சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, தமிழ்நாட்டில் இருந்த முக்கிய சிறுபான்மை கட்சியான விசிக, மெல்ல திமுக பக்கம் வந்து நின்றது. இவர்களுடன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணியில் வந்து சேர்ந்து கொண்டது. இப்படியாக, தமிழ்நாட்டில் பெரும் படையோடு நாடாளுமன்றத் தேர்தலில் முதல் வெற்றியை ருசித்தது திமுக.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற திட்டத்தைக் கையில் எடுத்தது. ஆனால், இதனைப் பார்த்து சற்று பயந்துபோன அப்போது ஆளும் கட்சியான அதிமுக, திமுகவின் இந்த வித்தியாசமான திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட முயன்றதாக விமர்சிக்கப்பட்டது. எனினும், அந்த திட்டத்தை மு.க. ஸ்டாலின் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று, தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் உள்ள மக்களை நேரடியாக களத்தில் சென்று சந்தித்து அவர்களிடம் உரையாடினார்.
இப்படியான பயணத்தில், சில தொகுதிகளில் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களே ஸ்டாலினுக்கு எதிராகச் சாட்டை சுழற்றினார்கள். ஆனால், அதையும் ஸ்டாலின் மிகவும் பக்குவமாக எதிர்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, “ஒன்றிணைவோம் வா” இயக்கத்தின் மூலமாக, திமுகவின் எம்எல்ஏ க்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் களமிறங்கி மக்களுக்காக பணியாற்ற வைத்தார் ஸ்டாலின்.
இந்த திட்டத்தில், அப்போதைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ வான ஜெ.அன்பழகனையும், களத்தில் இறக்கி விட்டார். அப்போது, அந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவின் கொடிய பிடியில் சிக்கிய ஜெ.அன்பழகன், எதிர்பாராத விதமாக, உயிரிழந்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுதார். அந்த இறப்பும், ஸ்டாலினின் கண்ணீரும், முரட்டு திமுக பக்தர்களை இன்னும் வேகப்படத்தியது. உசுப்பி விட்டது என்றே சொல்லலாம்.
அதனால், திமுகவினர் தொடர்ந்து களப்பணியாற்றி வந்தனர். இது, திமுக மேல் பொது மக்கள் மத்தியில் மிகப் பெரிய நன்மதிப்பை ஏற்படுத்தியது.
இந்த “ஒன்றிணைவோம் வா” களப் பணிதான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் அனைத்தும், மக்கள் மனதில் பதிந்து போனது. அதாவது, ஸ்டாலின் நெருக்கடியான பேரிடர் காலங்களிலும் மக்களுக்காகத் தொடர்ந்து செயல்படுவார். ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்கள் பணி ஆற்றுவார் என்கிற மிகப் பெரிய பிம்பத்தைத் தோற்றுவித்தது.
இப்படியாக, இந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலைக் குறி வைத்து, “மு.க. ஸ்டாலின் ஆகிய நான்..” என்று கூறி, தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின் என்ற தனிப் பெரும் ஆளுமை மேற்கொண்ட சூறாவளி பிரச்சாரம் தான், இன்று அவரை முதலமைச்சராக மாற்றி காலம் அழகு பார்க்கிறது.
மிக முக்கியமாக, இந்த தேர்தலுக்கு முன்பாக, ஸ்டாலின் தனது கட்சியைப் பலப்படுத்துவதிலும், கூட்டணிக் கட்சிகளை அனுசரித்துச் செல்வதிலும், களப்பணி ஆற்றுவதிலும் தன்னை ஒரு மிகச்சிறந்த தளபதியாக அவர் மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டியிருக்கிறார் என்றே தான் சொல்ல வேண்டும்.
அதே போல், இன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், ஆகச்சிறந்த முதலமைச்சராகத் தன்னை நிரூபிப்பது, இனி வரும் புதிய தலைமுறைகளின் காலத்திலும் அவர் காலூன்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்குக் காலமே பதில் சொல்லும். பொறுத்திருந்து பார்க்கலாம் கால மாற்றங்களை..!