தனிகட்சி தொடங்குகிறாரா மு.க.அழகிரி? வரும் 20ஆம் தேதி ஆலோசனை
By Aruvi | Galatta | Nov 16, 2020, 05:11 pm
தனிகட்சி தொடங்குவது தொடர்பாகத் தனது ஆதரவாளர்களுடன் வரும் 20 ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக வின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக மதுரையில் உள்ள மு.க.அழகிரியின் ஆதரவாளர்களே உறுதியான தகவலைத் தெரிவித்து உள்ளனர். அதன் படி, அடுத்த சில நாட்களில் மு.க. அழகிரி மதுரையில் உள்ள தனது ஆதரவாளர்கள், விசுவாசிகளை ஒருங்கிணைத்து தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து முக்கியமாக ஆலோசிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
முக்கியமாக, “மு.க. அழகிரி தனது தந்தை கருணாநிதி பெயரில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார்” என்றும் கூறப்பட்டு வந்தது.
அதே போல, கடந்த சில மாதங்களாகவே மு.க. அழகிரி பாஜகவில் இணைய உள்ளதாக சில புரளிகள் பரவியது. ஆனால், அது முற்றிலும் பொய்யான தகவல் என்று, பின்னர் தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த உள்ளூர் பாஜக பிரமுகர்கள், “ மு.க. அழகிரி பாஜகவுக்கு வந்தால், தாங்கள் வரவேற்பதாகவும்” கூறியிருந்தனர்.
மேலும் வரும் 21 ஆம் தேதி தமிழகம் வர உள்ள பாஜகவின் முக்கிய தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷாவை, மு.க. அழகிரி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்” என்றும், பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அதே போல், நடிகர் ரஜினி காந்தின் பல்வேறு அறிவிப்புகளுக்கு மு.க.அழகிரி ஆதரவு தெரிவித்திருந்தார், என்பதும் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மு.க.அழகிரியின் இந்த திடீர் முடிவு, “தனிக்கட்சி தொடங்குகிறாரா? அல்லது வேறு ஏதேனும் கட்சியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்துவாரா?” என்பதும், தற்போது பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.
அத்துடன், “வரும் 20 ஆம் தேதி தனிக் கட்சித் தொடங்குவது தொடர்பாகத் தனது ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி ஆலோசிக்க இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் அவர் மேற்கொள்வார்” என்றும், தனியார் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
மேலும், மு.க. அழகிரி நடத்தும் அந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அவரின் அடுத்தகட்ட அரசியல் முடிவு பற்றி அறிவிக்கக் கூடும் என்பதால், தமிழக தேர்தல் அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
குறிப்பாக, அடுத்த வருடம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்கள் மற்றும் விசுவாசிகளுடன் ஒருங்கிணைத்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது, திமுக வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மதுரையில் உள்ள திமுக தொண்டர்கள் அனைவரும் என்ன செய்து என்று தெரியாமல், விழி பிதிங்கி நிற்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், திமுக தலைமைக்கு மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது என்றும், அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இதனிடையே, “தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக வெளியான தகவல் தவறானது” என்று, மு.க.அழகிரி உதவியாளர் கூறியுள்ளார்.
“மு.க.அழகிரியின் அரசியல் நடவடிக்கை பற்றி தவறான தகவல்கள் உலா வருகிறது” என்று, மு.க.அழகிரி தரப்பிலிருந்து தற்போது கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.