கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மெட்ரோ ரெயில், புறநகர் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில், பஸ் போக்குவரத்து ஆகியவை முடங்கி உள்ளன. இது மக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறாக அமைந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படலாம் என்றும், புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. இதில் மாநில அரசிடம் இருந்து எப்போது அனுமதி கிடைத்தாலும் ரெயில்களை இயக்க தயார் நிலையில் இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
 
அரசு உத்தரவு வந்தால் செப்டம்பர் 1-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு தயாராக இருக்கிறோம். மெட்ரோ ரெயில்கள் தயார் நிலையில் உள்ளன. பயணிகளை பாதுகாப்பான முறையில் கையாள்வதற்காக சமூக இடைவெளியை பயணிகள் கடைப்பிடிக்கும் வகையில் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து நகரும் படிக்கட்டுகள், டிக்கெட் கவுண்ட்டர்கள், பிளாட்பாரங்கள் உள்ளிட்ட ரெயில் ஏறும் இடம் மற்றும் ரெயில்களின் உள்பகுதி உள்பட அனைத்து பகுதிகளிலும் வட்ட வடிவில் குறியீடுகள் வரையப்பட்டு வருகிறது.

சமூக இடைவெளியை பயணிகள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயணிகள் இயக்கத்தை கண்காணிக்க முடியும். அத்துடன் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் நுழைவு வாசலில் தேவைக்கு ஏற்ப வெப்பநிலை பரிசோதிக்கும் கருவிகளும், கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. சமூக இடைவெளியை பயணிகள் கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால் ரெயில் நிலையங்களில் வழக்கமாக ரெயில் நிறுத்தும் நேரத்தை விட கூடுதலாக நிறுத்தும் நேரமும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் குளிர்சாதன வசதி (ஏ.சி.) பயன்பாடு தவிர்க்க அரசு அறிவித்து உள்ளது. ஆனால் மெட்ரோ ரெயில்கள் அனைத்திலும் குளிர்சாதன வசதி செய்திருப்பதால், மீண்டும் ரெயில்கள் இயக்குகின்ற போது குளிர்சாதன வசதியை எப்படி தவிர்ப்பது? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

‘அன்லாக்-4’ என்ற பெயரில் தளர்வு நடவடிக்கைகளும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தளர்வின் ஒரு அம்சமாக மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி வழங்கப்படலாம், திரையரங்குகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையே லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற சமூக ஊடக தளம் சார்பில், செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிற தளர்வு நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் கருத்தை அறியும் விதத்தில் 25 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு சில தினங்களுக்கு முன் நடத்தி முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்தக் கருத்து கணிப்பில் `செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை, புறநகர் ரெயில் சேவையை இயக்குவதற்கு சர்வேயில் கலந்து கொண்ட மக்களில் 51 சதவீதம் பேர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 36 சதவீதத்தினர் மட்டுமே இந்த சேவைகளை தொடங்க ஆதரவு தெரிவித்துள்ளனர்' எனக்கூறப்பட்டுள்ளது