நடிகர் விவேக் நினைவலைகள்.. வாழ்க்கையும் வரலாறும்..! SPL Article
By Aruvi | Galatta | Apr 17, 2021, 01:59 pm
நகைச்சுவை மட்டுமின்றி சிந்தனையை தூண்டும் வகையிலும் நடித்து மக்களை பெரிதும் கவந்த சின்ன கலைவாணர் விவேக், சிரிப்பை நிறுத்திக்கொண்ட இந்த தருணத்தில், அவரின் நினைவலைகளை ஒரு முறை திரும்பிப் பார்க்கலாம்.
சமூக வீதிகள் மேம்பட திரையில் உழைத்த உண்மையான ஹீரோ நடிகர் விவேக் என்றால், அதில் மறுப்பதற்கு இல்லை. இந்த கருத்தை அனைவருமே ஏற்றுக்கொண்ட ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.
கடந்த 1961 ஆம் ஆண்டு, நவம்பர் 19 ஆம் தேதி கோவில்பட்டி அடுத்து உள்ள பெருங்கோட்டூர் என்னும் ஊரைச் சேர்ந்த சிவ.அங்கய்யா பாண்டியன் - மணியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் தான் விவேகானந்தன். இவரது தந்தை ஆசிரியரா பணியாற்றியவர்.
பின்னர், மதுரையில் செல்யட்படு வரும் அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் படித்த விவேகானந்தன், அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்று, மதுரையில் சில காலம் தொலைப்பேசி ஆப்ரேட்டராக பணியாற்றினர். பின்னர், சென்னையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வு எழுதி, சென்னைத் தலைமைச் செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
அதன் பிறகு, தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தபோது, இயக்குநர் சிகரம் பாலசந்தரின் அறிமுகம் கிடைத்து உள்ளது.
இதனையடுத்து, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த “மனதில் உறுதிவேண்டும்” என்ற படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானார் விவேகானந்தன் என்கிற விவேக்.
ஆம், சினிமாவிற்கு வந்த பிறகுதான், விவேகானந்தன் என்கிற தனது பெயரை விவேக் என்று, அவர் மாற்றி அமைத்துக்கொண்டார்.
“மனதில் உறுதிவேண்டும்” படத்தில் சின்ன தோற்றத்தில் நடித்த விவேக், மீண்டும் கே.பாலசந்தர் இயக்கிய “புது புது அர்த்தங்கள்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மேலும் புகழ் பெற்றார். இதனால், விவேக் ஜனங்களால் மத்தியில் பிரபலமடைந்து அனைவராலும் அறியப்படும் நடிகராக வலம் வரத் தொடங்கினார்.
“புது புது அர்த்தங்கள்” படத்தில், நடிகர் விவேக் பேசிய வசனங்களான “இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்” என்ற பிரபல வசனம், இன்றைய பொழுதுகளில் புதிதாக எடுக்கப்படும் தமிழ் சினிமாக்கால் வரை, பேசப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, அவர் தொடர்ந்து பல படங்களில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட இளம் ஹீரோக்கிளன் நண்பனாக நடித்து நகைச்சுவையில் கலக்கி வந்தாலும், “மின்னலே”, “பெண்ணின் மனதை தொட்டு”, “ரன்”, “நம்மவீட்டுக் கல்யாணம்”, “தூள்”, “சாமி” உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களில் தனது அவதாரமான நகைச்சுவையால், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையே அதிகம் உயர்த்திப் பிடித்தார். இந்த சீர்திருத்தக் கருத்துக்கள் மூலம், ரசிகர்களைச் சிரிக்க வைத்த அதே வேளையில் சிந்திக்கவும் தூண்டச் செய்தார் நடிகர் விவேக்.
குறிப்பாக, “மூட நம்பிக்கை, மக்கள் தொகை பெருக்கம், ஊழல், லஞ்சம், போன்றவையே, நடிகர் விவேக் கையில் எடுத்து, அவற்றில் நக்கல், நையாண்டி, என்று பொளந்து கட்டி சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.
இப்படியாக, ஆகச் சிறந்த சமுதாய சீர்திருத்த கருத்துகளையும் கூறி தொடர்ச்சியாக நடித்து வந்ததின் காரணமாக, நடிகர் விவேக் சின்ன கலைவாணர் என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டார்.
இதனால், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதை 5 முறை பெற்று சிறப்பு பெற்றார் நடிகர் விவேக். அதே போல், மத்திய அரசும் தனது பங்கிற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌவுரப்படுத்தியது.
மேலும், “நான்தான் பாலா”, “பாலக்காட்டு மாதவன்” உள்ளிட்ட சில படங்களில் நடிகர் விவேக் ஹீரோவாக நடித்து அசத்தினார்.
திரையுலகம் தாண்டி, மறைந்த குடியரசுத்து தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் மீது கொண்ட தீர பற்றால், அவரது கனவை நிறைவேற்றும் வகையில், கிரீன் கலாம் என்கிற அமைப்பு மூலம் கிட்டதட்ட ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதைத் தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். இதனால், சமூகத்தில் களத்தில் இறங்கி பசுமை புரட்சிகளையும் செய்து வந்தார்.
மிக முக்கியமாக, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கோடை கால வறட்சியைப் போக்கும் விதமாக, ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதே எனது நோக்கம் என்று கூறி, அது சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, அவற்றை செயல்படுத்தியும் வந்தார்.
சினிமா ரசிகர்கள் இவரை ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது.
திரைத்துறையில் ஒரு பக்கம் நடித்து வந்தாலும், இன்னொரு பக்கம் தொடர்ந்து படித்து வந்த விவேக், கடந்த 2015 ஆம் ஆண்டு முனைவர் பட்டமும் பெற்றார்.
விவேக், தனது சொந்த வாழ்க்கையிலும் கூட மிகச் சிறந்த உதாரண மனுஷனாகவே வாழ்ந்து வந்தார். விவேக்கின் மனைவி பெயர் அருள் செல்வி. விவேக் - அருள் செல்வி தம்பதிக்கு அம்ரிதா நந்தினி, தேஜஸ்வினி என்று 2 மகள்களும் இருக்கின்றனர்.
முக்கியமாக, பிரசன்ன குமார் என்கிற ஒரு மகன் இருந்தார். அவர் தான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது, மிகப் பெரிய அளவில் மன உடைந்து போன நடிகர் விவேக், எதிலும் நாட்டம் இல்லாமல் சற்று ஒதுங்கியே இருந்தார்.
இப்படியாக, ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய விவேக், கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கும் மேல் மிகச் சிறந்த நகைச்சுவை கலைஞராக தன்னுடைய அசாத்திய திறமையால் பொது மக்களின் மனங்களில் ஜொலித்து வந்த நடிகர் விவேக்கிற்கு, நேற்றைய தினம் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று அவருக்கு நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டு, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அவருக்கு இதய செயல்பாடு குறைந்த நிலையில், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க, அவருக்கு எக்மோ கருவி பொருத்தி இன்னும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இப்படி, அவருக்கு சிகிசிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக, நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முந்தைய நாள், அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், கொரோனா தடுப்பூசி பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் எழுந்தன. இதனையடுத்து, “நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல” என்று, நேற்று மாலை தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.