உயிருடன் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு
By Madhalai Aron | Galatta | Oct 16, 2020, 07:33 pm
சேலம் மாவட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்த சரவணன், தனது சகோதரர் இறந்துவிட்டதாக கூறி குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார். வாடகை நேரம் முடிந்த சூழலில், பெட்டியை திரும்ப எடுப்பதற்காக, ஊழியர்கள் வந்துள்ளனர்.
அப்போது, குளிர்பதன பெட்டியில் முதியவர் உயிரோடு கிடத்தப்பட்டு இருந்ததும், அவரது கை கால்கள் கட்டப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். முதியவர் பாலசுப்பிரமணிய குமாரை குளிர்பதன பெட்டியில் வைத்து, அவர் சாவதற்காக விடிய விடிய காத்திருந்ததை கேட்டு அதிர்ந்த அவர்கள், அக்கம் பக்கத்து மக்கள் உதவியுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதியவருக்கு நேற்று மாலை உடல்நிலை பாதிப்பு தீவிரமாகி வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், பத்திரிகையொன்றுக்கு அளித்த தகவலின்படி, ``சிகிச்சைக்காக முதியவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மயக்கநிலையில் இருந்தார். அவருக்கு வலிப்பு நோய் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால், சிடி ஸ்கேன் பரிசோதனையில் வலிப்பு நோய் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. அவரின் ரத்த பரிசோதனையிலும் எந்த பாதிப்புகளும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், நீண்ட காலமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்துள்ளது. அதன் காரணமாக அவரது உடல்நிலை நேற்று மாலை மோசமடைந்தது. வெண்டிலேட்டர் உதவியோடு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்தோம், இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். எத்தனை மணி நேரம் அவர் குளிரூட்டி பெட்டியில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறித்த தெளிவான தகவல்களை பெறமுடியவில்லை" என தெரிவித்தார்.
ஊழியர்கள் இந்த சம்பவத்தை பார்த்தவுடன், இது குறித்து சரவணனின் குடும்பத்தாரிடம் கேட்டபோது, ``அண்ணன் ஏற்கெனவே இறந்து விட்டார். அவரது ஆன்மா துடித்துக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் இறந்து விடுவார்" என்று எந்த பதற்றமுமின்றி தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தங்களுடைய செல்பேசியிலேயே பாலசுப்ரமணியம் மூச்சு விடும் காட்சியை பதிவு செய்தனர். ``பெரியவர் நன்றாகவே மூச்சு விடுகிறார். அவரைப் போய் ஐஸ் பெட்டியில் அடைத்திருக்கிறீர்களே" என்றும் அந்த குடும்பத்திடம் கூறிய ஊழியர்கள், அவர்களாகவே காவல்துறையிடமும் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சூரமங்கலம் காவல்துறையினர் சரவணன் வீட்டுக்கு வந்து பாலசுப்ரமணியத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில் குமார், "பாலசுப்ரமணியத்தின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அலட்சியமாக முதியவரை கையாண்டது தொடர்பாகவும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 287, 336 ஆகியவற்றின் கீழ் சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், பாலசுப்ரமணியம் உயிரிழந்ததையடுத்து சந்தேகத்திற்குரிய மரணம் என்ற அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 174 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. முதியவர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தபின்னர், அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் முதியவர் மீட்கப்பட்ட தினத்தன்று பேசிய ஆணையர் செந்தில் குமார் , "பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம், நரம்பியல் நோய் குறைபாடு பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும் கடந்த 12ஆம் தேதி தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் அவர் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் இறந்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் கூறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால்தான் அந்த முதியவரை மீண்டும் வீட்டுக்கே கொண்டு வந்து ஐஸ் பெட்டியில் வைக்க குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம்." என தெரிவித்திருந்தார்.