இரண்டாம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும்! - தீர்மானம் நிறைவேற்றிய அமைச்சர்
By Nivetha | Galatta | Aug 16, 2020, 03:52 pm
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், மக்கள் தொகைபெருக்கம் உட்பட, பல்வேறு நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், ``எதிர்கால நலன் கருதி, மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை, தமிழக அரசு இப்போதே மேற்கொள்ள வேண்டும்" என, நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னை, வந்தோரை வாழ வைக்கும் நகரமாக திகழ்கிறது. சென்னை சென்றால், எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும், தொழிலாளர்கள் சென்னைக்கு படையெடுக்கின்றனர்.
விமான நிலையம், துறைமுகம், ரயில் நிலையம், உயர்தர மருத்துவமனைகள், உயர் கல்வி நிறுவனங்கள் என, அனைத்து வசதிகளும் இருப்பதால், சென்னை உலக அளவில் பிரசித்தி பெற்ற நகரமாக திகழ்கிறது. தமிழகத்தில் தொழில் துவங்க முன்வரும் தொழில் முதலீட்டாளர்கள், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில், தொழில் துவங்கவே விரும்புகின்றனர்.இதன் காரணமாக, சென்னை மாநகரத்தில், நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இரண்டாம் தலைநகருக்கான கோரிக்கைகள் வலுத்து வந்தன.
இதைத்தொடர்ந்து, இன்றைய தினம், இரண்டாம் தலைநகரமாக மதுரையை உருவாக்கிட வேண்டும் என, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவின் சார்பில் திருமங்கலத்தில் இன்று (ஆக.16) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றினார்.
சிறப்பு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"இந்தியாவின் இரண்டாம் பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் பணிவான வேண்டுகோள் விடுத்து கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம்
தென்மாவட்ட மக்களின் இன்றைக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக முதல்வரும், துணை முதல்வரும் திகழ்ந்து வருகின்றனர். இந்த நான்காண்டு காலத்தில் பல ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட மக்கள் நலத்திட்டங்களை வாரிவாரி வழங்கி தென்மாவட்ட மக்களின் மனதை குளிரச் செய்துள்ளனர்.
அதேபோல், தற்போதுள்ள சூழ்நிலையில் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்குவது என்பது தென் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது
குஜராத் அருகே இருந்தாலும் காந்திநகரில் பாதியும், அகமதாபாத்தில் பாதியும் என அரசு அலுவலர்கள் உள்ளனர்.
ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைய உள்ளன. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்று தலைநகரங்கள் உள்ளன. பல வெளிநாடுகளில் 2 நகரங்கள் உள்ளன.
அந்த வகையில் மதுரையை இரண்டாம் தலைநகரமாக்க முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கருணைகூர்ந்து உருவாக்கினால் தென்மாவட்ட மக்களுக்கு வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும்.
இதுமட்டுமல்லாது, மதுரையில் சென்னை உயர் நீதிமன்ற கிளை அமைந்துள்ளது. சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. அதேபோல், தூத்துக்குடி துறைமுகம் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தென்மாவட்ட சாலைகளை இணைக்கும் சாலை கட்டமைப்பு தேவைக்கேற்ப உள்ளது. நிர்வாகம் அமைய வேண்டும் என்றால் குறைந்தது 10 ஆயிரம் ஏக்கர் நிலம் வேண்டும்.அதற்கு மதுரை புறநகர் பகுதிகளில் நிலத்தைத் தேர்வு செய்ய முடியும்.
தென் மாவட்ட மக்களின் தொழில் வளர்ச்சி, பொருளாளதார வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என தென் மாவட்ட அடிப்படை கட்டமைப்பு உருவாவது இரண்டாம் தலைநகர் காலத்தில் காலத்தின் கட்டாயம் ஆகிறது.
என்றும் அன்னை மீனாட்சி குடிகொண்டிருக்கும் மதுரையில் தமிழகத்தில் நிர்வாகம் நன்றாக உருவாக வேண்டும். ஆகவே, தென் மாவட்ட மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் முதல்வரும், துணை முதல்வரும் கருணை உள்ளத்தோடு மதுரையை இரண்டாம் தலைநகரமாக உருவாக்கிட மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வேண்டுகோள் விடுக்கிறது"
இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.