மதுரையில் முழு முடக்கம் அமலானது! எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?
By Aruvi | Galatta | Jun 24, 2020, 11:17 am
கொரோனா பரவுவதைத் தடுக்கும் விதமாக மதுரையில் முழு முடக்கம் இன்று முதல் அமலானது. இதில், குறிப்பிட்ட சில வற்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்படும் பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால், மதுரையில் நள்ளிரவு முதல் ஊரடங்கு தொடங்கிய நிலையில், வரும் 30 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இதன் காரணமாக, அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு வந்து செல்லும் பேருந்துகள், நேற்று நள்ளிரவு முதலே நிறுத்தப்பட்டன. அத்துடன், மதுரையில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பிட்ட சில பணிகளுக்கு, குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி,
- ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் உள்ள கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- உணவகங்களில் பார்சல் மட்டுமே அளிக்க வேண்டும் என்றும், தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
- அம்மா உணவகங்கள், பால் கடைகள், மருந்தகங்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்பட அனுமதி.
- ரயில் மற்றும் விமான பயணிகள் இ பாஸ் பெற்று, வாகனங்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுளம் ஆகிய நகராட்சி பகுதிகள் மற்றும் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் முழு பொது முடக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.