“எல்லா கோயிலிலும் தமிழ் அர்ச்சனை இடம் பெற வேண்டும்!” கரூர் பசுபதீசுவரர் குடமுழுக்கு வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
By Aruvi | Galatta | Dec 04, 2020, 03:34 pm
“எல்லா கோயிலிலும் தமிழ் அர்ச்சனை இடம் பெற வேண்டும்!” என்று, கரூர் பசுபதீசுவரர் குடமுழுக்கு வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம், பெரிய அளவில் பரப்புரை செய்து வருகிறது.
இது தொடர்பாகத் தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கரூர் பசுபதீசுவரர் கோயில் திருக்குடமுழுக்கு இன்று
நடைபெற்றுள்ள நிலையில், நேற்றைய தினம் பிற்பகலில் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு கருவறை, யாக சாலை, கோபுரக் குடமுழுக்கு ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்கள் ஓதி பூசை செய்ய ஆணை பிறப்பித்திருப்பது தமிழ்கூறும் நல்லுலகின் பேருவகைக்கும் பெருமிதத்திற்கும் பெரு நன்றிக்கும் உரியதாகும்” என்று, குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா கால முடக்கம் உள்ள நிலையில் மிகக் குறுகிய அவகாசம் வைத்து, பசுபதீசுவரர் கோயில் திருக்குடமுழுக்கு அறிவிக்கப்பட்டது. அக்கோயில் வளாகத்திற்குள்தான் கருவூரார் நல்அடக்கக் கோயில் உள்ளது.
கரூர் வழக்கறிஞர் தமிழ் ராசேந்திரன் அவர்கள் மூலம் ஒரு கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவருடைய நிறுவனத்தில் அந்த சந்திப்பு நடந்தது. அக்கூட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடந்தது.
இந்து வேதமத மறுமலர்ச்சி இயக்கத்தின் சித்தர் மரபுப் பெரியவர் ஐயா மூங்கிலடியார் என்கின்ற பொன்னுச்சாமி அடிகளார், சித்தர் மரபு சத்தியபாமா அறக்கட்டளைத் தலைவர் சத்தியபாமா அம்மையார், நாம் தமிழர் கட்சியின் கரூர் வடக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.அருணபாரதி, சிவனடியார் நாகேந்திர கிருஷ்ணன், உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கூட்ட முடிவுக்குப் பின், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர், பசுபதீசுவரர் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் அலுவலகங்களுக்குச் சென்று,
திருக்குடமுழுக்கை தமிழ் வழியில் நடத்துமாறு கேட்டுக் கொள்ளும் மனுக்கள் கொடுத்தோம் என்றும், கோயில் கருவறை, யாகசாலை, கோயில் கோபுரம் ஆகிய மூன்று இடங்களிலும் தமிழ் மந்திரம் ஓதி பூசையும் சடங்குகளும் செய்ய வேண்டும் என்றும், கோபுரக் கலசத்தில் நீராட்டு செய்து தமிழ் மந்திரம் ஓதுவார் ஓதிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தோம்” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், வீரத்தமிழர் முன்னணியின் கரூர் மாவட்டச் செயலாளர் தோழர் இரமேசு இளஞ்செழியன் கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில்
நடைபெற ஆணையிடக் கேட்டுக் கொண்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். வழக்கறிஞர் ரூபஸ் இவ்வழக்கைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, கரூர் வழக்கறிஞர் தமிழ் ராசேந்திரன் முயற்சியில் கருவூரார் வழிச் சித்தர் பீடத் தலைவர் மூங்கிலடியார் என்னும் பொன்னுசாமி அடிகளார், கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு தமிழ்வழியில் நடக்க ஆணை இடக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்தார். இந்த வழக்கை வழக்கறிஞர் அருணாச்சலம் தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் வழக்கை முழுமையாக விசாரித்தனர். அதன் படி, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி கிருபாகரன் வெளியிட்டார்.
அதில், “கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கில் எல்லா இடத்திலும் தமிழ் அர்ச்சனை இடம் பெற வேண்டும். சமற்கிருதத்தில் மந்திரம் சொன்னாலும் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
ஏற்கெனவே தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெற வேண்டும் என்று இதே நீதிமன்றம் ஆணை இட்டு அது செயல்படுத்தப்பட்ட பின், மீண்டும் தமிழுக்காக, இவர்கள் இங்கு வரவேண்டிய நிலை ஏன் வந்தது?” என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
“இதனால், இந்து சமய அறநிலையத்துறையை எச்சரிக்கிறேன் என்றும், இனிமேல் தமிழ்நாட்டில் வேறு எந்த இந்து சமய அறநிலையக் கோயிலிலும் தமிழில் குடமுழுக்கு மற்றும் அர்ச்சனை செய்ய அனுமதி கோரி யாரும் உயர்நீதிமன்றத்திற்கு வர முடியாத நிலையை இந்து சமய அறநிலையத்துறை உண்டாக்க வேண்டும்” என்றும், வலியுறுத்தினர்.
“அப்படி எந்தக் கோயிலிலாவது தமிழ் மந்திர அர்ச்சனை மறுக்கப்பட்டு, அனுமதி கோரி யாரேனும் உயர்நீதி மன்றம் வந்தால், அந்த வழக்குக்காக இந்து சமய அறநிலையத் துறையிடம் 10 இலட்சம் ரூபாய் செலவு தொகை வசூலிக்கப்படும் என்றும், தமிழ் மொழியானது தெய்வத் தமிழ் என்று போற்றப்படுகிறது என்றும், தமிழ் வளர்க்க சங்கம் அமைத்த மதுரையில் இந்நீதிமன்றம் அமைந்துள்ளது” என்றும், நீதிபதிகள் தமிழின் பெருமைகளைக் குறிப்பிட்டனர்.
மேலும், தமிழை யாரும் புறக்கணிக்கக்கூடாது” உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை நீதிபதி கிருபாகரன் தமது தீரப்புரையில் கூறினார்.
அத்துடன், “விரிவான எழுத்து வடிவிலான தீரப்பை இன்னும் 2 நாட்களில் அளிப்பதாகவும்” கூறினார்.
தொலைக்காட்சியில் இந்த தீர்ப்பை அறிந்த தமிழ் ஆன்மிகர்களும் தமிழர்களும் பெருமகிழ்வு கொண்டு, ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மதுரைத் தீரப்பைத் தமிழ்நாடெங்கும் செயல்படுத்தத் தமிழ் ஆன்மிகச் சான்றோர்களும் தமிழ் இன உணர்வாளர்களும் தமிழ்த்தேசியர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று, இந்த தீர்ப்பை மையப்படுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் இந்த செய்தியை வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.