“ஜல்லிக்கட்டில் இனி நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி”
“இனி ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு” என்று, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
“ஜல்லிக்கட்டு” தமிழ்நாட்டின் பாரம்பரிய வீரம் செறிந்த விளையாட்டாக, தொன்றுத்தொற்று தொடர்கிறது. வீரம் செறிந்த சரித்திரக் கதைகள் அதில் நிறைய உண்டு.
ஜல்லிக்கட்டிற்கு மற்றொரு பெயர் ஏறு தழுவல் என்ற பெயரும் உண்டு. இந்த ஜல்லிக்கட்டிற்கு முன்பெல்லாம் புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இதற்கு அதிகம் பயன்படுத்தி வந்தனர். இந்த காளைகழள ஓடவிட்டு அதனை அடக்க வேண்டும் என்பதாகும்.
இப்படியாக, ஜல்லிக்கட்டில் விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதியும் தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகக் கருதியும் இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் அண்மைய ஆண்டுகளில் ஜல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து தடையும் பெற்ற நிலையில், ஒட்டுமொத்த தமிழ்நாடே திரண்டெழுந்து மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் உரிமையைப் பெற்றது.
இந்த சூழலில் தான், சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என்று, கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன், அந்த மனுவில், “வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்” என்றும், கோரியிருந்தார்.
மேலும், “நாட்டு மாடுகளுக்கு பெரிய திமில் இருக்கும் என்பதால் அதனை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும் என்றும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளுக்குத் திமில் இருப்பதில்லை” என்றும், அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத் திருத்தத்தில், நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாட்டு கலாச்சார பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலும் இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளதை” சுட்டிக்காட்டியது.
“வெளிநாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள தடையில்லை என்ற அரசுத் தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இனி பங்கேற்க அனுமதிக்கக் கூடாது” என்றும், அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
இவற்றுடன், “ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் என கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் என்றும், பொய் சான்றிதழ் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்” என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கம் அளிக்க அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாடுகளுக்குச் செயற்கை கருத்தரித்தல் முறையைத் தவிர்க்க வேண்டும்” என்றும், அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.